இந்தியன் பிரீமியர் லீக் தொடர் பயணத்தில் 18 வருட காத்திருப்பானது 2025 ஜூன் 03 ஆம் திகதி அகமதாபாத்தில் முடிவுக்கு வந்தது.
விராட் கோலிக்கும் அவரது ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும், அணியின் ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டத்திற்கும் இது பரவசத்தின் உச்ச தருணமாக அமைந்தது.
அதேநேரம், 2025 ஐ.பி.எல். சீசன் முழுவதும் எதிர்பார்ப்புகளை மீறிய பஞ்சாப் கிங்ஸுக்கு, இறுதிப் போட்டியானது மற்றொரு மன வேதனையாக அமைந்தது.
பல ஆண்டுகளாக தவறவிட்ட வாய்ப்புகள் தோல்விகளின் போதும், ஏமாற்றங்களின் போதும், அணிக்கு உறுதுணையாக இருந்த பெங்களூருவின் விசுவாசமான ரசிகர்களுக்கு ரஜத் படிதர் மற்றும் அவரது வீரர்கள் சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்துள்ளனர்.
நீண்ட அதேநேரம், வேதனையான காத்திருப்பு ஒரு அற்புதமான போட்டியுடன் முடிவுக்கு வந்ததால், இறுதி பந்து வீசப்படுவதற்கு முன்பே, விராட் கோலியால் தனது உணர்ச்சிகளை அடக்க முடியவில்லை.
20 ஓவர்களின் நிறைவில் முன்னாள் அணித் தலைவர் இறுதியாக வெற்றியை ருசித்தார்.
RCB அணி வெற்றியை ருசித்த பின்னர், கண்ணீருடன் விராட் கோலி அவரது மனைவி அனுஷ்கா சர்மாவை அன்புடன் கட்டியணைத்தார்.
இது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
அவரது முன்னாள் அணி வீரர்களான ஏ.பி.டி.வில்லியர்ஸ் மற்றும் கிறிஸ் கெய்ல் ஆகியோர் விராட் கோலியின் சிறந்த ஐ.பி.எல். தருணத்தில் அவருடன் இணைந்து அதை இன்னும் சிறப்பானதாக்கினர்.
நேற்றிரவு 07.30 மணிக்கு அகமதாபாத்தில் அமைந்துள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ஆரம்பமான இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துப் பரிமாற்றம் மேற்கொள்ளத் தீர்மானித்தது.
அதற்கிணங்க முதலில் துடுப்பெடுத்தாடிய ரஜத் படிதர் தலைமையிலான RCB அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவேளையில் வீழ்ந்தமையினால் அவர்களால் மிகப்பெரிய இலக்கினை முன்னேற முடியவில்லை.
20 ஓவர்கள் நிறைவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 190 ஓட்டங்களை மாத்திரம் பெற முடிந்தது.
இது எதிர்பார்க்கப்பட்ட ஓட்ட எண்ணிக்கையை விட 15-20 ஓட்டங்கள் குறைவாகவே அமைந்தது.
RCB அணிக்காக அதிகபட்சமாக 35 பந்துகளில் 43 ஓட்டங்களை எடுத்தார்.
பஞ்சாப் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் இறுதி மூன்று ஓவர்களில் வெறும் 22 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்து ஆட்டத்தை சிறப்பாகக் கடைப்பிடித்தனர்.
பந்து வீச்சில் PBKS அணிக்கு அர்ஷ்தீப் சிங் (40 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்) மற்றும் கைல் ஜேமிசன் (48 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்) ஆகியோர் முக்கிய பங்களிப்பை வழங்கினர்.
191 என்ற இலக்கினை துரத்தியாடிய ஷரேயஸ் ஐயர் தலைமையிலான PBKS அணியானது இறுதிப் போட்டியின் அழுத்தத்தில் சரிந்தது.
ஷஷாங்க் சிங் மற்றும் ஜோஷ் இங்கிலிஸ் மட்டுமே RCB இன் பந்துவீச்சு தாக்குதலில் ஆதிக்கம் செலுத்த முயன்றனர்.
PBKS அணியின் தொடக்க வீரர்களாக பிரப்சிம்ரன் சிங் மற்றும் பிரியன்ஷ் ஆர்யா களம் புகுந்தனர்.
இதில் பிரியன்ஷ் ஆர்யா 24 ஓட்டங்களிலும், பிரப்சிம்ரன் சிங் 26 ஓட்டங்களிலும் ஆட்மிழந்தனர்.
தொடர்ந்து களம் புகுந்த இங்கிலிஸ் அதிரடியாக ஆடினார்.
அவர் 39 ஓட்டங்களுடனும், அடுத்து வந்த ஷ்ரேயாஸ் ஐயர் ஓரு ஓட்டத்தையும் பெற்று ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்து இளம் வீரர்களான நேஹல் வதேரா மற்றும் ஷஷாங் சிங் ஜோடி சேர்ந்தனர்.
இருவரும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர்.
இதில் வதேரா 15 ஓட்டத்துடனும், அடுத்து வந்த ஸ்டாய்னிஸ் 6 ஓட்டத்துடனும், ஓமர்சாய் 1 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்தனர்.
இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 184 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெங்களூரு திரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.
பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக ஷஷாங் சிங் 61 ஓட்டங்களை ஆட்டமிழக்காது எடுத்தார்.
RCB அணிக்காக அதிகபட்சமாக புவனேஷ்வர், குருனால் பாண்டியா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
குருனால் பாண்டியா இந்த இன்னிங்ஸில் தனது திறமையை நிரூபித்தார்.
ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதை ஒன்றுக்கு மேற்பட்ட முறை வென்ற ஒரே வீரர் ஆனார்.
2017 ஆம் ஆண்டில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அவர் சிறந்த விருதை வென்றிருந்தார்.