மத்தியப் பிரதேச தலைநகர் ஐஷ்பாக் மைதானத்திற்கு அருகில் புதிதாகக் நிர்மாணிக்கப்பட்ட போபால் மேம்பாலம் அதிகாரப்பூர்வ திறப்பு விழாவிற்கு முன்பே சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.
648 மீட்டர் நீளமும் 8.5 மீட்டர் அகலமும் கொண்ட இந்தப் பாலம், 18 கோடி இந்திய ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இதில் 90 டிகிரி கோணத்தில் கூர்மையான திருப்பம் உள்ளது.
இது உள்ளூர்வாசிகள் மற்றும் சமூக ஊடக பயனர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது விபத்துகளுக்கான இடமாக இது மாறக்கூடும் என்று அவர்கள் அஞ்சுகின்றனர்.
போபால் மேம்பாலம், கிராசிங்கில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கும் நீண்ட காத்திருப்புகளை நீக்குவதற்கும் நோக்கமாகக் கொண்டு நிர்மாணிக்கப்பட்டது.
மேலும், மஹாமாய் கா பாக், புஷ்பா நகர், நிலையப் பகுதி மற்றும் நியூ போபால் இடையேயான போக்குவரத்தை எளிதாக்கும் நோக்கம் கொண்டது.
2023 மார்ச்சில் தொடங்கிய பாலக் கட்டுமானம், பயண நேரங்களையும் போக்குவரத்து இடையூறுகளையும் குறைப்பதன் மூலம் தினமும் கிட்டத்தட்ட மூன்று இலட்சம் மக்களுக்கு பயனளிக்கும் என்று மாநில அரசு கூறியுள்ளது.
எனினும், அதன் விசித்திரமான வடிவமைப்பு விமர்சன அலைகளைத் தூண்டியுள்ளது.
பாலத்தின் ஒரு முனையில் உள்ள இறுக்கமான 90 டிகிரி திருப்பம் சமூக ஊடகங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
இதுபோன்ற பொறியியல் தேர்வுக்குப் பின்னால் உள்ள தர்க்கத்தைப் பலர் கேள்வி எழுப்புகின்றனர்.


















