2025-27 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) சுழற்சி, இலங்கைக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான டெஸ்ட் போட்டியுடன் இன்று (ஜூன் 17) காலி சர்வதேச மைதானத்தில் தொடங்க உள்ளது.
இரு அணிகளும் தங்கள் ரெட்-பால் ஆட்டத்தை வெற்றியுடன் தொடங்க ஆர்வமாக உள்ள நிலையில், போட்டியின் போக்கில் மழை முக்கிய பங்கு வகிக்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் போட்டி, கிட்டத்தட்ட நான்கு மாத இடைவெளிக்குப் பின்னர் இலங்கை அணி நீண்ட கால கிரிக்கெட் போட்டிக்கு திரும்புவதைக் குறிக்கிறது.
இலங்கை அணி கடைசியாக பெப்ரவரியில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் 0-2 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரில் விளையாடியது.
மறுபுறம், பங்களாதேஷ் புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையுடன் தொடருக்குள் நுழைந்துள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் சட்டோகிராமில் சிம்பாப்வேக்கு எதிராக பங்களாதேஷ் அணி அபார வெற்றி பெற்று.
இரண்டு போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என சமன் செய்தது.
அந்த வேகத்தில் களமிறங்கும் பங்களாதேஷ், புதிய WTC சுழற்சியில் சீக்கிரமே முத்திரை பதிக்க முயற்சிக்கும்.
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று காலை 10.00 மணிக்கு காலி சர்வதேச மைதானத்தில் தொடங்குகிறது.
இந்த நிலையில், மேற்கு, சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும். சில இடங்களில் 50 மி.மீ. வரை ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதனால், போட்டி மழை காரணமாக பாதிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.