இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் முடிவில் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியானது ஒன்பது விக்கெட் இழப்புக்கு 484 ஓட்டங்களை குவித்துள்ளது.
காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (17) ஆரம்பமான போட்டியின் முதல் நாள் முடிவில் நஜ்முல் ஹொசைன் சாண்டோ மற்றும் முஷ்பிகுர் ரஹீம் இணைந்து 247 ஓட்டங்களை எடுத்து பங்களாதேஷை 293/3 என்ற வலுவான நிலையில் வைத்தனர்.
பங்களாதேஷ் 45/3 என்ற நிலையில் தடுமாறிக் கொண்டிருந்தபோது சாண்டோ மற்றும் முஷ்பிகுர் ஜோடி இணைந்து, நான்காவது விக்கெட்டுக்கு அதிகபட்ச இணைப்பாட்டத்தை உருவாக்கினர்.
இது 2018 ஆம் ஆண்டில் லிட்டன் தாஸ் மற்றும் மோமினுல் ஹக் இடையேயான 180 ஓட்ட கூட்டணியை முறியடித்தது.
அதேநேரம், இலங்கையின் வலுவான தொடக்கத்தையும் இது அழித்தது.
இலங்கை அணியின் வலது கை சுழற்பந்து வீச்சாளர் தரிந்து ரத்நாயக்க தனது டெஸ்ட் போட்டியின் முதல் ஆட்டத்தில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த நிலையில், போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று ஆரம்பிக்க முஷ்பிகுர் ரஹீம், நஜ்முல் ஹொசைன் சாண்டோ மற்றும் லிட்டன் தாஸ் ஆகியோரின் உதவியுடன் பங்களாதேஷ் நான்கு விக்கெட்டுகள் இழப்புடன் 400 ஓட்டங்களை கடந்தது.
எனினும், மழையால் பாதிக்கப்பட்ட போட்டி, இரண்டு மணிநேர தாமதத்திற்கு பின் ஆரம்பிக்க ஆட்டத்தின் தன்மை மாறியது.
இதன் பொருள், மழை குறுக்கீட்டுக்கு பின்னர் வீசப்பட்ட 20.4 ஓவர்களில் 61 ஓட்டங்களுக்கு ஐந்து விக்கெட்டுகள் வீழ்ந்தன.
இறுதியாக போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் பங்களாதேஷ் 9 விக்கெட்டுக்கு 484 ஓட்டங்களை எடுத்திருந்தது.
நஜ்முல் ஹொசைன் சாண்டோ 148 ஓட்டங்களையும், முஷ்ஃபிகுர் ரஹீம் 163 ஓட்டங்களையும் மற்றும் லிட்டன் தாஸ் 90 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.
பந்து வீச்சில் அசித்த பெர்னாண்டோ, மிலன் பிரியநாத் ரத்நாயக்க மற்றும் தரிந்து ரத்நாயக்க ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இன்று போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டமாகும்.