சோனியா காந்தியின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
78 வயதான காங்கிரஸின் மூத்த தலைவரான சோனியா காந்தி திடீர் உடல்நலக்குறைவால் கடந்த 15-ஆம் திகதி டெல்லியில் உள்ள கங்காராம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். வயிறு தொடர்பான பிரச்சினை அவருக்கு இருந்தது.
வைத்தியர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இதில் உடல்நிலை சீரானதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் வீடு திரும்பினார்.
இந்த நிலையில் 17-ஆம் திகதி அவருக்கு மீண்டும் உடல்நல பாதிப்பு ஏற்பட்ட நிலையில், காலை 10 மணி அளவில் அவர் அதே வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காகச் சென்றார்.
இந்த நிலையில், மருத்துவமனையில் இருந்து சோனியா காந்தி தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக கங்காராம் வைத்தியசாலை தலைவர் அஜய் சுவரூப் கூறுகையில், ‘சோனியா காந்தி தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். வயிறு தொடர்பான பிரச்சினை காரணமாக அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வைத்தியர்கள் தகுந்த சிகிச்சையை வழங்கினர். அவரது உடல்நிலை சீராக உள்ளது. மேலும் வெளிநோயாளி என்ற அடிப்படையில் சோனியா காந்தியின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.