பணியில் அலட்சியமாக இருந்த மூன்று அதிகாரிகளை பணியில் இருந்து நீக்கும்படி ‘ஏர் இந்தியா’ நிறுவனத்துக்கு சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
விமான நிலைய பாதுகாப்பு பணியில் ஏற்பட்ட குறைபாடு தொடர்பாக, ஏர் இந்தியா நிறுவனம், சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகத்திடம் முறையிட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைக்கு பின்னர் பாதுகாப்பு உட்பட பல்வேறு பணிகளில் அலட்சியமாக செயல்பட்ட மூன்று அதிகாரிகளை உடனடியாக பணி நீக்கம் செய்ய, ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, விமானக் குழுவினரின் பணி நேரங்களை திட்டமிடுதல், உரிமங்களில் உள்ள குறைபாடுகளை கருத்தில் கொள்ளாமல் செயல்படுதல், ஓய்வு அளித்தல் மற்றும் உடனடி தேவைகளை பூர்த்தி செய்தல் போன்றவற்றில் கடுமையான விதிமீறல்கள் குறித்து ஏர் இந்தியா நிறுவனம் கவலை தெரிவித்தது.
இதையடுத்து, இயக்குநரகம் சார்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதில், அலட்சியமாக செயல்படுதல், பணியில் கவனம் இல்லாதது போன்ற நடவடிக்கைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த விதிமீறல்களுக்கு காரணமான, தங்களது பொறுப்பை சரியாக செய்யாத அதிகாரிகளுக்கு எதிராக, ஏர் இந்தியா நிறுவனம் முறையான நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளவில்லை என்பதும் இதன்போது தெரியவந்துள்ளது.