பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா-அமெரிக்கா இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் ஜூலை 8 ஆம் திகதிக்குள் அறிவிக்கப்படலாம், ஏனெனில் அனைத்து விதிமுறைகளும் இரு தரப்பினராலும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பேச்சுவார்த்தைகளை இறுதி செய்வதற்காக தலைமை பேச்சுவார்த்தையாளரும் வர்த்தகத் துறையின் சிறப்புச் செயலாளருமான ராஜேஷ் அகர்வால் தலைமையிலான இந்தியக் குழு வொஷிங்டனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது.
உலகெங்கிலும் உள்ள நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதிப்பதற்கான ட்ரம்பின் காலக்கெடு ஜூலை 9 ஆம் திகதியுடன் முடிவடைவதால், இந்த ஒப்பந்தம் சரியான நேரத்தில் வருகிறது.
வர்த்தக இடைவெளியைக் குறைப்பதற்காக ஏப்ரல் 2 ஆம் திகதி ட்ரம்ப் அறிவித்த 26 சதவீத வரிகளை ஜூலை 9 ஆம் திகதி வரை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது.
அதே நேரத்தில் அடிப்படை வரியான 10 சதவீத வரி இன்னும் உள்ளது.
கூடுதல் 26 சதவீத வரியிலிருந்து முழுமையாக விலக்கு அளிக்க இந்தியா கோரி வருகிறது.
இந்த ஆண்டு ஒக்டோபருக்குள் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் (BTA) பல்துறை, விரிவான முதல் கட்டத்தை நோக்கி இரு தரப்பினரும் பணியாற்றி வருகின்றனர்.
அண்மைய காலமாக, இந்தியாவுடனான பணிகளில் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தம் குறித்து ட்ரம்ப் பலமுறை சூசகமாக குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வாரம், தனது நிர்வாகம் அனைத்து வர்த்தக தடைகளையும் நீக்க முயற்சிப்பதாக அவர் கூறினார்.
இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் முதன்மையாக விவசாயம், ஆட்டோமொபைல்கள், தொழில்துறை பொருட்கள் மற்றும் உழைப்பு மிகுந்த பொருட்கள் போன்ற முக்கிய துறைகளில் கவனம் செலுத்துகிறது.



















