பௌத்த மதத்தின் ஆன்மீகத் தலைவரான தலாய் லாமா,(Dalai Lama) தனது 90வது பிறந்த நாளை நேற்றுக் கொண்டாடினார்.
கடந்த 1935 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 6 ஆம் திகதி திபெத்தில் உள்ள தக்சேர் கிராமத்தில் பிறந்த தலாய் லாமா, திபெத் மக்களின் ஆன்மீகத் தலைவராக மட்டுமல்லாது திபெத் மக்களின் உரிமைகள், மத சுதந்திரம், மற்றும் உலக அமைதி ஆகியவற்றுக்காக பல ஆண்டுகளாக அமைதிப்பூர்வமாக போராடி வருகிறார். இதற்காக அவர் கடந்த 1989ஆம் ஆண்டு நோபல் அமைதி பரிசு பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அவர் தனது பிறந்த நாள் உரையில் ‘நான் 130 வயதுவரை வாழ ஆசைப்படுகிறேன். மறுபிறப்பும் தொடரும். என் மறுபிறப்பை நிர்ணயிப்பது என் விருப்பத்திற்கேற்ப இருக்கவேண்டும். இதில் சீன அரசு எவ்விதத் தலையீடும் செய்யக்கூடாது’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
சீன அரசு, தலாய் லாமாவின் மறுபிறப்பை சட்டபூர்வமாக தாங்களே நிர்ணயிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றது. ஆனால் தலாய் லாமா, “Gaden Phodrang Trust” ‘ மூலம் தமது மறுபிறப்பை தீர்மானிக்கப்படும் என முன்னதாகவே அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர்இ தலாய் லாமாவுக்கு ‘பாரத் ரத்னா’ விருது வழங்கக்கோரி முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை 80க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
















