2034 ஆம் ஆண்டுக்குள் நியூசிலாந்து தனது சர்வதேச கல்விச் சந்தையை இரட்டிப்பாக்க திட்டமிட்டுள்ளது.
வெளிநாட்டு மாணவர்கள் பகுதிநேரமாகப் படிக்கும் போது வேலை செய்வது தொடர்பான விதிகளைத் தளர்த்துவது உள்ளிட்ட சலுகைகளை வழங்குவதன் மூலம் இது சாத்தியமாகும் என்று நியூஸிலாந்து அரசாங்கம் திங்களன்று (14) தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டு முதல் சர்வதேச மாணவர் சேர்க்கை சீராக அதிகரித்து வருவதால், 2034 ஆம் ஆண்டுக்குள் 7.2 பில்லியன் நியூஸிலாந்து டொலர் வருவாயை ($4.32 பில்லியன்) எட்ட அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக நியூஸிலாந்தின் கல்வி அமைச்சர் எரிகா ஸ்டான்போர்ட் ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச மாணவர் சேர்க்கைக்காக அதிகளவில் போராடும் இடங்களான அவுஸ்திரேலியாவும் அமெரிக்காவும் வெளிநாட்டு மாணவர்களைக் குறைக்க முயற்சிக்கும் வேளையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
இதனால், போட்டிச் சந்தைகளில் உள்ள பல்கலைக்கழகங்கள் அந்தக் கட்டுப்பாடுகளைப் பயன்படுத்திக் கொள்ளப் போட்டியிடுகின்றன.
நியூசிலாந்தின் சர்வதேச கல்விச் சந்தை தற்போது பொருளாதாரத்திற்கும் அரசாங்கத்திற்கும் 3.6 பில்லியன் நியூஸிலாந்து டொலர்கள் மதிப்புடையதாக உள்ளது.
2024 ஆம் ஆண்டில் 83,700 ஆக இருந்த சர்வதேச மாணவர் சேர்க்கை 2027 ஆம் ஆண்டில் 105,000 ஆகவும் 2034 ஆம் ஆண்டில் 119,000 ஆகவும் அதிகரித்து, பொருளாதாரத்திற்கு அதன் மதிப்பை இரட்டிப்பாக்க அரசாங்கம் விரும்புகிறது.
நியூசிலாந்திற்கு அதிக வெளிநாட்டு மாணவர்கள் வருவதை ஊக்குவிப்பதற்காக, தகுதியுள்ள சர்வதேச மாணவர்களுக்கான பகுதிநேர வேலை நேரத்தை அதிகரிக்கவும், அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டுப் படிப்புத் திட்டங்களில் உள்ள அனைத்து மூன்றாம் நிலை மாணவர்களுக்கும் வேலை உரிமைகளுக்கான தகுதியை விரிவுபடுத்தவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் வெளிநாட்டு மாணவர்களுக்கு, குறிப்பாக சீனாவிலிருந்து வருபவர்களுக்கு விசாக்களை தடை செய்துள்ளது.
மே மாதத்தில், வெள்ளை மாளிகை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கு வெளிநாட்டு மாணவர்களைச் சேர்க்கும் திறனை இரத்து செய்தது, பின்னர் இந்த நடவடிக்கை ஒரு கூட்டாட்சி நீதிபதியால் தடுக்கப்பட்டது.
இதனிடையே, அவுஸ்திரேலிய அரசாங்கம் 2025 ஆம் ஆண்டிற்கு புதிய சர்வதேச மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கையை 270,000 ஆகக் கட்டுப்படுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.



















