2028 ஆம் ஆண்டு லொஸ் ஏஞ்சல்ஸில் (LA28) நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் அதிகாரப்பூர்வமாக மீண்டும் சேர்க்கப்படும்.
அதற்கான திகதிகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, சர்வதேச ஒலிம்பிக் நிர்வாகம் (IOC), LA28 இல் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளுக்கான டி:20 வடிவ கிரிக்கெட் போட்டிகள் 2028 ஜூலை 12 முதல் ஜூலை 29 வரை நடைபெறும் என்று அறிவித்துள்ளது.
அனைத்து போட்டிகளும் லொஸ் ஏஞ்சல்ஸ் நகர மையத்திலிருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் அமைந்துள்ள போமோனா ஃபேர்ப்ளெக்ஸில் நடைபெறும்.
பெரும்பாலும் ஒரு நாளில் அங்கு இரு போட்டிகள் நடைபெறும்.
உள்ளூர் நேரப்படி போட்டிகள் காலை 9:00 மணி மற்றும் மாலை 6:30 மணிக்கு ஆரம்பமாகும்.
LA28 ஒலிம்பிக் போட்டிகளுக்கான தகுதி முறை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
ஆனால் ஜூலை 17 அன்று சிங்கப்பூரில் தொடங்கும் ஐசிசியின் ஆண்டு மாநாட்டின் போது இது குறித்து விவாதிக்கப்படும்.
இந்த அறிவிப்பு விளையாட்டில் கிரிக்கெட்டுக்கான மற்றொரு மைல்கல் தருணத்தைக் குறிக்கிறது.
இது கிரிக்கெட் இரண்டாவது முறையாக ஒலிம்பிக்கில் சந்தர்ப்பமாகும்.
1900 ஆம் ஆண்டு பாரிஸில் அறிமுகமான 128 ஆண்டுகளுக்குப் பின்னர் கிரிக்கெட் ஒலிம்பிக்கில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
1900 ஒலிம்பிக் போட்டியில் கிரேட் பிரிட்டன் பிரான்சுக்கு எதிரான ஒரே ஒரு போட்டியில் தங்கம் வென்றது.


















