காசாவில் நிலவும் பயங்கரமான சூழ்நிலையை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேல் கணிசமான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்குள் பாலஸ்தீன அரசை ஐக்கிய இராச்சியம் அங்கீகரிக்கும் என்று பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் செவ்வாய்க்கிழமை (30) தெரிவித்தார்.
இஸ்ரேல் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்வது, இரு நாடுகள் தீர்வை வழங்கும் நீண்டகால நிலையான அமைதிக்கு உறுதியளிப்பது, ஐக்கிய நாடுகள் சபை உதவி விநியோகத்தை மீண்டும் தொடங்க அனுமதிப்பது உள்ளிட்ட பிற நிபந்தனைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும்.
இல்லையெனில் செப்டம்பர் மாதம் நடைபெறும் ஐ.நா. பொதுச் சபையில் இங்கிலாந்து பதில் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் கூறினார்.
அவசர அமைச்சரவைக் கூட்டத்தை நடத்திய பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய சர் கெய்ர், காசாவில் நிலவும் “சகிக்க முடியாத சூழ்நிலை” மற்றும் ” தீர்வுக்கான சாத்தியக்கூறு குறைவு” போன்ற கவலை காரணமாக இந்த திட்டத்தை இப்போது அறிவிப்பதாகக் கூறினார்.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்த நடவடிக்கை “ஹமாஸின் கொடூரமான பயங்கரவாதத்திற்கு வெகுமதி” என்று சாடியுள்ளார்.
கடந்த வாரம் பிரான்ஸ் செப்டம்பர் மாதம் பாலஸ்தீன அரசை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதாக அறிவித்தது – உலகின் பணக்கார நாடுகளின் G7 குழுவில் அவ்வாறு செய்யும் முதல் நாடு இதுவாகும்.














