ஓவலில் நாளை (31) தொடங்கும் ஆண்டர்சன்-டெண்டுல்கர் கிண்ணத்தின் ஐந்தாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இந்த அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் மருத்துவக் குழு, காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள பும்ராவின் பணிச்சுமையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுத்ததாக ESPNcricinfo செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
அவருக்குப் பதிலாக, காயம் காரணமாக கடந்த போட்டியில் விளையாடாத இளம் வேகப்பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப், மீண்டும் அணிக்கு திரும்புவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பும்ரா ஹெடிங்லியில் நடந்த முதல் டெஸ்டில் விளையாடினார்.
எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் விளையாடவில்லை, அந்த டெஸ்டில் இந்தியா வென்றது.
மேலும், லொர்ட்ஸ் மற்றும் ஓல்ட் டிராஃபோர்டில் நடந்த அடுத்த இரு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடினார்.
தொடர் தொடங்குவதற்கு முன்பே, தலைமை பயிற்சியாளர் கெளதம் கம்பீர் மற்றும் இந்திய அணி நிர்வாகம், பும்ரா ஐந்து டெஸ்ட் போட்டிகளில் மூன்றில் மட்டுமே விளையாடுவார் என்று அறிவித்திருந்தது.
இந்தியா தற்போது 1-2 என்ற கணக்கில் தொடரில் பின்தங்கியுள்ள நிலையில், ஓவல் மைதானத்தில் நடைபெறும் இந்தக் கடைசிப் போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய கடுமையாகப் போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


















