ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவன், விமானம் ஒன்றின் லேண்டிங் கியரின் மேல் பக்கத்தில் ஒளிந்துகொண்டு டெல்லி வரை பயணித்துள்ளான்.
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுவன் அதே விமானத்தில் ஆப்கானிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக PTI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
டெல்லி விமான நிலையத்தில் உள்ள காம் ஏர்லைன்ஸ் விமான குழுவினர் ஒரு சிறுவன் விமானத்தின் அருகே நடந்து சென்றதை கவனித்துள்ளனர்.
அவர்கள் உடனடியாக விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தனர்.
அந்த சிறுவன் விசாரணைக்காக மூன்றாவது முனையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.
விசாரணையில் அந்த சிறுவன் ஆப்கானிஸ்தானின் குந்துஸ் (Kunduz) மாகாணத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
காபூல் விமான நிலையத்திற்குள் நுழைந்து விமானத்தின் பின்பக்கத்தில் உள்ள சென்ட்ரல் லேண்டிங் கியர் பகுதியை தான் அடைந்ததாக விசாரணை அதிகாரிகளிடம் சிறுவன் தெரிவித்துள்ளார்.
விசாரணைக்குப் பிறகு, எந்த சதித்திட்டமும் இல்லையென தீர்மானிக்கப்பட்ட நிலையில் விமானம் பாதுகாப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. சிறுவனின் பெயரும் அடையாளமும் வெளியிடப்படவில்லை.
ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபன் அரசு இந்தச் சம்பவம் தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
ஆனால் தாலிபன் அரசின் எல்லையோர காவல்படையின் செய்தித் தொடர்பாளர் அப்துல்லா ஃபரூக்கி இந்தச் சம்பவம் பற்றி விசாரித்து வருவதாக கூறியுள்ளார்.
இதனிடையே, சிறுவன் விமானத்தை அடைந்தது காபூல் விமான நிலையத்தின் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஒருவர் விமானத்தில் ஒளிந்து கொண்டு இன்னொரு இடத்திற்கு பயணித்தது இது முதல்முறையல்ல.
ஆனால் விமானத்தின் லேண்டிங் கியர் பகுதியில் ஒழிந்துகொண்டு ஒருவர் பயணித்தது இதுவே முதல்முறை ஆகும்.
ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் தீவிரமான குளிரில் அந்த உயரத்தில் உயிர் பிழைப்பது அசாத்தியமானது என வல்லுநர்களை கூறுகின்றனர்.















