ஹம்பாந்தோட்டை தங்காலை, சீனிமோதர பகுதியிலிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் கடந்த 21ஆம் திகதியன்று இரண்டு கப்பல்கள் மூலம் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குடவெல்ல, மாவெல்ல ஆகிய கடற்கரைகளில் தரையிறக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இதன் பின்னர் குறித்த போதைப்பொருள் அங்கிருந்து, கடற்கரைக்கு அருகிலுள்ள வீடொன்றிற்கு எடுத்துச் செல்லப்பட்டு, சிறிய ரக பாரவூர்தியில் ஏற்றப்பட்டு, சீனிமோதர மற்றும் கொடெல்லவெல பகுதிகளுக்கு இரண்டு சந்தர்ப்பங்களில் கொண்டு செல்லப்பட்டுள்ளதாவும் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.
மாவெல்ல கடற்கரையிலிருந்து சீனிமோதர வீட்டிற்குப் போதைப்பொருட்களைக் கொண்டு சென்ற குழுவினர், அந்த வீட்டில் மது அருந்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வீட்டில் கண்டெடுக்கப்பட்ட உடலங்களுக்கு அருகில் ஐஸ் போதைப்பொருள் இருந்ததாகவும் பொலிசார் குறிப்பிட்டிருந்தனர்.
முன்னதாக, தங்காலை – சீனிமோதர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், மூன்று சிறிய ரக பாரவூர்த்தியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ் மற்றும் ஹெரோயின் உள்ளிட்ட 705 கிலோகிராம் போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
அதன்படி, குறித்த போதைப்பொருள் கையிருப்பின் சந்தை மதிப்பு, சுமார் 988 கோடி ரூபா என்றும் பொலிசார் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.
இந்த கண்டுபிடிப்பு தரைப்பகுதியில் ஒரே நாளில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பாரியளவிலான போதைப்பொருள் தொகையாக பொலிசார் வரையறுத்துள்ளனர்.














