குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் விசாரணைக்கு உட்படுத்தப்படும் கெஹெல்பத்தர பத்மே, அந்த திணைக்களத்திலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட மாட்டார் என வழங்கப்பட்ட உறுதிமொழியை டிசம்பர் 2 ஆம் திகதி வரை நீட்டித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (23) உத்தரவிட்டது.
தனது மகனின் பாதுகாப்பை உறுதி செய்ய உத்தரவிடக் கோரி கெஹெல்பத்தர பத்மேவின் தாயார் தாக்கல் செய்த ரிட் மனு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மேன்முறையீட்டுப் நீதிமன்றின் தலைமை நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் அமர்வு முன் இந்த மனு அழைக்கப்பட்ட நிலையில் பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் வசந்த பெரேராவின் இணக்கத்துடன் உறுதிமொழி நீட்டிப்பு செய்யப்பட்டது.
தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது மகனின் உயிருக்கான பாதுகாப்பை உறுதி செய்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வெளியே உள்ள இடங்களுக்கு அழைத்துச் செல்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி மனுதாரர் நீதிமன்றத்தில் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


















