புது டில்லி கார் குண்டுவெடிப்பு நிகழ்த்திய தாக்குதல் தாரியான வைத்தியர் உமர் வெடிபொருட்களை சோதிக்க வீட்டில் ஆய்வகம் அமைத்து டில்லியில் குண்டு வெடிப்பு நடத்த சோதித்து பார்த்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
டில்லி செங்கோட்டையில் போக்குவரத்து சிக்னலில் கார் ஒன்று, கடந்த 10ம் திகதி வெடித்து சிதறியது.
இந்த சம்பவத்தில் காரை இயக்கிய வைத்தியர் உமர் நபி உட்பட, 13 பேர் உயிரிழந்ததுடன் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இதேவேளை, பயங்கரவாத தாக்குதல் என அறிவிக்கப்பட்டுள்ள இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக, தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது.
தாக்குதலைத் தொடர்ந்து, புல்வாமாவின் கோய்ல் கிராமத்தில் உள்ள உமரின் வீட்டில் பாதுகாப்பு படையினர், கடந்த சில நாட்களாக சோதனை நடத்தி வந்தனர்.
இதில், பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதுடன் வெடிபொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
ஜெய்ஷ் – இ – முகமது உள்ளிட்ட பல பயங்கரவாத அமைப்புகளுடன் குறித்த நபர் தொடர்பில் இருந்ததும் உறுதி செய்யப்பட்டது.
இந்த சூழலில், குறித்த நபரின் வீடு நேற்று முன்தினம் நள்ளிரவு பாதுகாப்பான முறையில் வெடி வைத்து தகர்க்கப்பட்ட நிலையில் முழு வீடும் தரைமட்டமானதை அடுத்து, கட்டட இடிபாடுகளில் தடயவியல் துறையினர் ஆய்வு செய்தனர்.
இதன்போது சந்தேகேநபரான வைத்தியர் உமர் வெடிபொருட்களை சோதிக்க வீட்டில் ஆய்வகம் வைத்திருந்தமையும் டில்லியில் குண்டுவெடிப்பு நடத்த அதனை வீட்டிலேயே சோதித்து பார்த்துள்ளமையும் தெரியவந்துள்ளது.
இதேவேளை, நவம்பர் 8ம் திகதி முதல் 10ம் திகதி வரை நடந்த சோதனையின் போது, பரிதாபாத்தில் உள்ள இரண்டு தனித்தனி வீடுகளில் இருந்து 2,900 கிலோ எடையுள்ள வெடிபொருட்களும் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


















