2026 ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் நடைபெறும் திகதி அறிவிக்கப்பட்டநிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அணியில் தக்கவைத்துக்கொண்ட மற்றும் விடுவித்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அண்மைக்காலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரராக மாறியிருந்த இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரனவை, வரவிருக்கும் தொடருக்காக அணியின் நிர்வாகம் விடுவிக்க முடிவு செய்துள்ளது.
கடந்த ஆண்டு இவரை இந்திய ரூபா 13 கோடிக்கு சென்னை அணி தக்கவைத்திருந்தது.
2023 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடிய பத்திரன, 32 போட்டிகளில் 47 விக்கெட்டுகளை வீழ்த்தி அணிக்கு முக்கியப் பங்காற்றினார்.
அப்போதைய தலைவர் மகேந்திர சிங் தோனி கூட பத்திரனவை கவனத்துடன் பயன்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.
எனினும், டிசம்பர் 16 ஆம் திகதி அபுதாபியில் நடைபெறவுள்ள ஏலத்தில் பத்திரனவை சென்னை அணி மீண்டும் ஏலம் எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஏலத் திகதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் இருந்து விடுவிக்கப்படும் மற்றும் தக்கவைக்கப்படவுள்ள வீரர்களின் பட்டியலை இந்திய நேரப்படி நேற்று மாலை 3.00 மணிக்கு முன் வெளியிட வேண்டியிருந்த நிலையில் இவ்வாறு பட்டியல் வெளியப்பட்டுள்ளது.
அதன்படி, மதீஷ பத்திரனவைத் தவிர, நியூசிலாந்து வீரர்கள் டெவோன் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா உட்பட பல வீரர்களை விடுவிக்கவும் சென்னை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.




















