ரஷ்யாவுடன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் குறித்து விவாதிக்க பென்டகனின் மூத்த அதிகாரிகள் உக்ரேனுக்கு பயணித்துள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க இராணுவச் செயலாளர் டான் டிரிஸ்கோல் தலைமையிலான இந்தக் குழு, துருக்கியப் பயணத்திலிருந்து திரும்பும் உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை வியாழக்கிழமை (20) கியேவில் சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதன்கிழமை முதல் அமெரிக்காவும் ரஷ்யாவும் உக்ரேனிடமிருந்து பெரும் சலுகைகளைக் கொண்ட ஒரு புதிய அமைதித் திட்டத்தைத் தயாரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகத் தொடங்கின.
வொஷிங்டனோ அல்லது மொஸ்கோவோ இந்தத் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
முன்னதாக, உக்ரேனின் மேற்கு நகரமான டெர்னோபில் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.
2022 ஆம் ஆண்டில் ரஷ்யா உக்ரேன் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியது.
இந்த நிலையில், உக்ரேனிய அதிகாரிகளைச் சந்தித்து போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் குறித்து விவாதிக்க அமெரிக்க நிர்வாகத்தின் சார்பாக செயலாளர் டிரிஸ்கோலும் அவரது குழுவினரும் இன்று (வியாழக்கிழமை) காலை கியேவுக்கு வந்தனர் என்று இராணுவ செய்தித் தொடர்பாளர் கர்னல் டேவிட் பட்லர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
ஜனவரி மாதம் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து உக்ரேன் தலைநகரில் பேச்சுவார்த்தை நடத்திய மிக மூத்த அமெரிக்க இராணுவ அதிகாரிகள் டிரிஸ்கோலும் ஜெனரல் ஜார்ஜும் ஆவர்.
புதன்கிழமை வெளியான ஒரு படத்தில் டிரிஸ்கோல் உக்ரேன் பாதுகாப்பு அமைச்சர் டெனிஸ் ஷ்மிஹாலை சந்தித்து கைகுலுக்கிக்கொண்டிருப்பதைக் காட்டியது.














