இலங்கை உள்நாட்டுப் போரில் உயிர் நீத்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராளிகளை நினைவுகூரும் மாவீரர் நாள் நிகழ்வுகள் ஆண்டு தோறும் நவம்பர் 27 அன்று பிரித்தானியாவில் மிகவும் உணர்வுப்பூர்வமாக அனுசரிக்கப்படுகின்றன.
லண்டன், எக்ஸெல் (ExCeL) ஒக்ஸ்போட் உள்ளிட்ட பல நகரங்களில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த நிகழ்வுகளில், பிரித்தானியாவில் வசிக்கும் பெருமளவிலான புலம்பெயர் தமிழர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

உயிர் நீத்த போராளிகளின் உருவப்படங்கள் மற்றும் பெயர் தாங்கிய கல்லறைகளின் மாதிரிகள் வைக்கப்பட்ட நினைவுக் கூடங்களில், தமிழீழத் தேசியக் கொடியேற்றப்பட்டு, அஞ்சலிச் சுடர்கள் ஏந்தப்பட்டன. இந்நிகழ்வுகள் பல்வேறு தமிழ் அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட தமிழர்கள், போரினால் பாதிக்கப்பட்ட தமது சமூகத்தின் வலி மற்றும் தியாகங்களை நினைவுகூர்வதாகவும், இந்த நினைவேந்தல் உரிமையை நிலைநாட்டுவது தங்களுக்கு மிகவும் முக்கியமானது என்றும் தெரிவித்தனர்.

இந்த நிகழ்வுகள் இலங்கையில் மட்டுப்படுத்தப்பட்டு இருந்தாலும் பிரித்தானியாவில் சட்டத்திற்கு உட்பட்ட விதிகள் மற்றும் அமைதியான முறையில் அனுசரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
தமிழ்ச் சமூகத்தினர், இந்த நினைவேந்தல் மூலம் தமது கலாச்சார மற்றும் தேசிய அடையாளத்தை நிலைநிறுத்துவதாகவும், நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான தமது போராட்டத்தை உலகுக்கு எடுத்துரைப்பதாகவும் தெரிவித்தனர்.
இதேவேளை இந்நாளை துக்கம், துணிவு மற்றும் உறுதிப்பாட்டுடன் நினைவுகூருவது ஒரு அடிப்படை உரிமை மட்டுமல்ல, அது நிறைவேற்றப்பட வேண்டிய கடமையாகும் என ஸ்ட்ராட்போர்ட் மற்றும் பவ் நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் வலியுறுத்தியுள்ளார்.

பல தசாப்தங்களாகத் தமிழ்க் குடும்பங்கள் உண்மை மற்றும் பொறுப்புக்கூறலுக்காகத் தொடர்ந்து போராடி வருகின்றன. கடந்த ஆண்டில், பிரித்தானியத் தொழிலாளர் அரசாங்கம் முதன்முறையாக, கடுமையான மனித உரிமை மீறல்களில் குற்றம் சாட்டப்பட்ட இலங்கை அதிகாரிகள் மீது தடைகளை விதித்துள்ளது; இது நீதி நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க படியாகும் என்றும், ஆனாலும் இன்னும் செய்ய வேண்டிய பணிகள் அதிகம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், போரில் இறந்தவர்களை நினைவுகூர தமிழர்களுக்கு அடிப்படை உரிமை உள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபை உறுதிப்படுத்தியுள்ள நிலையில், உண்மையைப் பின்தொடர்வதற்கும் நீதியை நிலைநாட்டுவதற்கும் பிரிட்டனுக்கு ஒரு வரலாற்றுப் பொறுப்பு உள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கையில் ஒரு சுதந்திரமான வழக்குத் தொடுநரின் அலுவலகத்தை நிறுவுவதற்கான அழைப்பை UK அரசாங்கம் ஆதரித்திருப்பதை அவர் வரவேற்பதாகவும், கண்ணியம் மற்றும் உரிமைக்காகப் போராடுபவர்களுக்குத் தொடர்ந்து மரியாதை செலுத்துவதாகவும் உமா குமரன் MP தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.



















