பிரித்தானியாவில் ஆளும் கட்சிக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கு கணிசமாக குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Find Out Now எனும் அமைப்பு அண்மையில் முன்னெடுத்த ஆய்வு ஒன்றில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, ஆளும் தொழிலாளர் கட்சிக்கு 14 வீத ஆதரவே கிடைத்துள்ளதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
கடந்த தேர்தலில் தொழிலாளர் கட்சியிடம் தோல்வியை சந்தித்த கன்சர்வேட்டிவ் கட்சிக்கும் மக்கள் செல்வாக்கு மீளவும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அந்தக் கட்சிக்கு 20 வீதமானவர்கள் ஆதரவு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த ஆய்வில் வழமைப் போல் Reform UK கட்சிக்கு 31 வீதமானவர்கள் ஆதரவு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின்படி, ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சியை கிரீன்ஸ் கட்சி முந்த 18 வீத மக்கள் ஆதரவை பெற்றுக்கொண்டுள்ளதாக Find Out Now ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து Find Out Now அமைப்பின் தலைவர் டைரான் சுர்மன் கருத்து வெளியிடுகையில, கடந்த 100 ஆண்டுகளில் தொழிலாளர் கட்சி மிக மோசமான நிலையை அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தற்போதைய ஆளும் கட்சி புலம்பெயர்ந்தோரை கட்டுப்படுத்தத் தவறிவிட்டதாக மக்கள் கருதுவதாக தெரிவிக்கபட்டுள்ளது. இந்த ஆண்டு மட்டும் 31 ஆயிரம் புலம்பெயர்ந்தவர்கள் பிரித்தானியாவுக்குள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது மக்களுக்கு வரிசுமையை ஏற்படுத்த போவதில்லை என தெரிவித்து ஆட்சிக்கு வந்த தொழிலாளர் கட்சி அரசாங்கம் தற்போதைய வரவு செலவுத் திட்டத்தில் 13 பில்லியன் பவுண்டுகள் அளவுக்கு வரிகள் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

















