கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன், ஒப்பிடும் போது இங்கிலாந்து முழுவதும் உள்ள வைத்தியசாலையில் காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை 50 வீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய சுகாதார சேவைகளின் தரவுகள் இதனை தெரிவித்துள்ளன.
கடந்த வாரம் இங்கிலாந்தில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 1,717 நோயாளிகள் வைத்தியசாலைகளின் படுக்கைகளில் இருததாகவும், இதில் 69 பேர் தீவிர சிகிச்சையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது 2024ஆம் ஆண்டு இதே வாரத்தடன் ஒப்பிடும் போது 56 வீத அதிகரிப்பாகும்.
கடந்த நவம்பர் 30ஆம் திகதி, இங்கிலாந்து முழுவதும் வைத்தியசாலை படுக்கைகளில் 2,040 காய்ச்சல் நோயாளிகள் இருந்துள்ளனர். இது 2024ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் திகதியுடன் ஒப்பிடும் போது 74 வீத அதிகரிப்பாகும்.
இந்த ஆண்டு காய்ச்சல் பருவம் வழக்கத்தை விட முன்னதாகவே தொடங்கிவிட்டதாகவும், கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தில் வைத்தியசாலைகள் மீதான அழுத்தம் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவசர சிகிச்சைக்கான தேசிய மருத்துவ இயக்குநர் பேராசிரியர் ஜூலியன் ரெட்ஹெட், நிலைமை கவலையளிப்பதாக தெரிவித்துள்ளார்.
குளிர்காலத்தில் சுகாதார சேவை முன் எப்போதும் இல்லாத வகையில் காய்ச்சல் அலையை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இந்த ஆண்டு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ள போதிலும், உச்சத்தை எட்டவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

















