பிரதான பாதையில் இயக்கப்படும் ரயில்கள் தற்போது தாமதங்களை சந்தித்து வருவதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அம்பேபுஸ்ஸ மற்றும் அலவ்வ இடையே ஒற்றைப் பாதையில் ரயில்கள் இயக்கப்படுவதால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது.
கடந்த நாட்களில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக, அம்பேபுஸ்ஸ – அலவ்வவுக்கு இடையில் அமைந்துள்ள புஜ்ஜொமுவ ரயில் நிலையம் அருகில் இருந்த ரயில் பாதையின் அடியில் உள்ள மதகு, அருகில் பாயும் மாஓயா ஆற்றை நோக்கித் தள்ளப்பட்டு உடைந்தது.
இதன் காரணமாக, ரயில் தண்டவாளத்தின் கீழ் சுமார் 45 அடி ஆழமான பள்ளம் ஏற்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, பிரதான பாதையில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன, மேலும் பிரதான, வடக்கு மற்றும் கிழக்கு பாதைகளில் ரயில் சேவைகள் ஸ்தம்பித்தன.
எனவே, கொழும்பு கோட்டைக்கும் அம்பேபுஸ்ஸவிற்கும் இடையிலான பகுதிக்கு மட்டுமே ரயில் நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டன.
அம்பேபுஸ்ஸ மற்றும் அலவ்வ இடையேயான புஜ்ஜொமுவ பிரிவில் இருந்த தடைகள், தன்னார்வக் குழுக்கள் மற்றும் இலங்கை இராணுவத்தின் ஆதரவுடன் அகற்றப்பட்டு, ரயில் பாதை சீரமைக்கப்பட்டதாக ரயில்வே திணைக்களம் நேற்று தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று (10) முதல், குருநாகல், கணேதென்ன, ரம்புக்கன மற்றும் பொல்கஹவெல ஆகிய பிரதான ரயில் பாதைகளில் இருந்து பல அலுவலக ரயில்கள் மீண்டும் இயக்கப்படும் என்று ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.













