இலங்கையில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமையைக் கருத்தில் கொண்டு, தரம் 6 இல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இணையவழி மூலம் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
2025- தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையின் மீள் பரிசீலனைப் பெறுபேறுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
பெறுபேறுகள் மாற்றமடைந்த மாணவர்களிடமிருந்து விண்ணப்பப் படிவங்களைப் பெற்று அதிபர்கள், அவற்றை இணையவழி முறைமையினுள் உள்ளீடு செய்யும் பணிகள் 2025.11.26 ஆம் திகதியன்று ஆரம்பிக்கப்பட்டது.
2025.12.05 ஆம் திகதியன்று இணையவழி மூலமாக விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிக்க வேண்டிய இறுதித் திகதி என்றாலும், தற்போதுள்ள அனர்த்த நிலைமை காரணமாக குறித்த இறுதித் திகதி 2025.12.12 ஆம் திகதியாக திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் 2025 ஆம் ஆண்டில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பாடசாலைகளுக்கு 2026 ஆம் ஆண்டில் தரம் 6 இற்கு அனுமதிப்பதற்கான முதலாவது மேன்முறையீடுகளை சமர்ப்பிக்கும் செயற்பாடுகள் தற்போதளவில் ஆரம்பிக்கப்படவில்லை.
அது தொடர்பில் சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல்கள் பொய்யானவை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
2025 ஆம் ஆண்டு தரம் 06 இற்கு முதல் சுற்றில் பாடசாலைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பாடசாலைகளுக்கு அனுமதித்த பின்னர் நிலவுகின்ற வெற்றிடங்களுக்காக இணையவழி முறைமையூடாக மேன்முறையீட்டு விண்ணப்பப் படிவங்கள் கோரப்படும் – என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.














