இந்துக்களால் கோலாகலமாக கொண்டாடப்படும் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை யுனஸ்கோவின் அருவமான கலாச்சார பாரம்பரிய பட்டியலில் இன்று (10) இணைக்கப்பட்டுள்ளது.
டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற யுனெஸ்கோவின் முக்கிய கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது.
அருவமான கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான அரசுகளுக்கிடையேயான குழுவின் (ICH) 20 மாநாடு தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது.
கடந்த டிசம்பர் 8ஆம் திகதி முதல் எதிர்வரும் 13ஆம் திகதி வரை டெல்லியில் உள்ள செங்கோட்டையில் இந்த மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.
இந்த மாநாட்டை இந்தியா நடத்துவது இதுவே முதல் முறையாகும்.
இந்நிலையில் தீபாவளிக்கு முன்னரே இந்தியாவின் பல முக்கிய நிகழ்வுகள் யுனஸ்கோவின் அருவமான கலாச்சார பாரம்பரிய பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
அதன்படி, கும்பமேளா, கொல்கத்தாவின் துர்கா பூஜை, குஜராத்தின் கர்பா நடனம், யோகா, வேத மந்திரங்களின் பாரம்பரியம் மற்றும் ‘ராமாயண’ காவியத்தின் பாரம்பரிய நிகழ்ச்சியான ராம்லீலா உள்ளிட்ட 15 மரபுகள் தற்போது இந்தியாவில் யுனெஸ்கோவின் அருவமான கலாச்சார பாரம்பரியத்தின் பிரதிநிதித்துவ பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.















