அனுராதபுரம், கல்னேவை பகுதியில் இரவு நேரத்தில் வீடு புகுந்து 57 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான டொயோட்டா பிராடோ ஜீப், பணம், தங்க நகைகள் மற்றும் பிற சொத்துக்களைத் திருடிய வழக்கில் ஆறு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கல்னேவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புல்னேவா பகுதியில் கடந்த டிசம்பர் 7 ஆம் திக இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
திருடப்பட்ட பொருட்களில் ரூ. 57,268,000 பெறுமதியான டொயோட்டா பிராடோ ஜீப் உள்ளடங்கும்.
இது அண்மைய மாதங்களில் இந்தப் பகுதியில் பதிவான மிக அதிக மதிப்புள்ள வாகனத் திருட்டுகளில் ஒன்றாகும்.
திருட்டினைத் தொடர்ந்து கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கு அமைவாக கல்னேவை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
டிசம்பர் 14 அன்று குருணாகல், மாவதகம மற்றும் வில்கமுவ ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதன்போது 10.3 கிராம் ஹெரோயின், 10.25 ஐஸ் போன்ற போதைப்பொருட்களும், நான்கு ஜோடி கையுறைகள், நான்கு கூர்மையான கத்திகள் மற்றும் குற்றத்தில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் பல வாகனங்கள், ஒரு மோட்டார் சைக்கிள், ஒரு வேன் மற்றும் ஒரு லொறி உள்ளிட்ட வாகங்கனையும் அதிகாரிகள் மீட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதான 34 முதல் 48 வயதுக்குட்பட்ட ஆறு சந்தேக நபர்களும் குருநாகல், நுககொல்ல, மாவதகம, மெல்சிரிபுர மற்றும் கண்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
திருடப்பட்ட பிராடோ ஜீப் மீகலேவா பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
திருடப்பட்ட பணத்தின் ஒரு பகுதியாக நம்பப்படும் ரூ. 5,939,000 ரொக்கத்தையும், குற்றத்தின் மூலம் பெறப்பட்ட வருமானத்தைப் பயன்படுத்தி வாங்கப்பட்டதாகக் கூறப்படும் பல சொத்துக்களையும் புலனாய்வாளர்கள் மீட்டனர்.
கைதான சந்தேக நபர்கள் நேற்று (15) கெகிராவ நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலப்படுத்தப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக டிசம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
சம்பவம் குறித்து கல்னேவை பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














