பிரான்ஸ் செனட் சபையின் உறுப்பினர் சமந்தா கேசபோன் (Samantha Cazebonne) சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவை அண்மையில் பாராளுமன்றத்தில் சந்தித்தார்.
இந்தச் சந்திப்பில் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ரெமி லம்பேர்ட் மற்றும் பிரான்சை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவினரும் கலந்துகொண்டனர்.
இங்கு கருத்துத் தெரிவித்த சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன, பாதகமான காலநிலை காரணமாக நாடு எதிர்கொண்ட மோசமான இயற்கை அனர்த்தத்திலிருந்து மீள்வதற்கு அரசாங்கம் அவசர நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் குறிப்பிட்டார். இந்தப் பேரிடர் சூழ்நிலையில் பிரான்ஸ் அரசாங்கம் இலங்கைக்கு வழங்கிய ஆதரவிற்கும் சபாநாயகர் நன்றி தெரிவித்தார்.
இந்தப் பேரிடரை எதிர்கொண்ட இலங்கையர்களின் ஒற்றுமை மீண்டும் ஒருமுறை உலகிற்கு நிரூபிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் பிரான்ஸ் தூதுக்குழுவினரிடம் எடுத்துக் கூறினார். “Rebuild Sri Lanka” திட்டத்தின் மூலம் சர்வதேசக் குழுக்களுக்கு இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பும் உருவாகியுள்ளதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கைக்கும் பிரான்சுக்கும் இடையில் காணப்படும் நீண்டகால நட்புறவை நினைவு கூர்ந்த கௌரவ சபாநாயகர், 2023 ஆம் ஆண்டு பிரான்ஸ் ஜனாதிபதியின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் மூலம் இந்த நட்பு மேலும் வலுப்படுத்தப்பட்டதாகச் சுட்டிக்காட்டினார்.
இங்கு கருத்துத் தெரிவித்த பிரான்ஸ் செனட் சபை உறுப்பினர் சமந்தா கேசபோன் (Samantha Cazebonne), நாடு முகங்கொடுத்துள்ள அவசரகால நிலைமை குறித்து தனது அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டதுடன், இலங்கைக்கு பிரான்ஸ் அரசாங்கம் தொடர்ந்தும் ஆதரவு வழங்கும் என்றார். ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து, இலங்கைக்குத் தேவையான மனிதாபிமான உதவிகளை வழங்க பிரான்ஸ் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், பிரான்ஸ் அரசாங்கத்தால் வழங்கப்படும் பிற மனிதாபிமான உதவிகள் எதிர்வரும் நாட்களில் இலங்கைக்கு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கை பிரஜைகள் சிறந்த மனிதாபிமானத்தைக் கொண்டவர்கள் எனச் சுட்டிக்காட்டிய பிரான்ஸ் செனட் சபை உறுப்பினர், இதன் மூலம் நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த முடியும் என்பதையும் குறிப்பிட்டார். இலங்கையில் உள்ள பிரான்ஸ் சர்வதேச பாடசாலைகளை மேலும் வலுப்படுத்தி முன்கொண்டு செல்வதற்குத் தேவையான ஆதரவை வழங்குமாறும் அவர் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த சபாநாயகர், இந்தக் கோரிக்கையை கல்வி அமைச்சின் பரிசீலனைக்கு ஆற்றுப்படுத்துவதாகத் தெரிவித்தார்.
மேலும், இலங்கையில் பெண்கள் தொடர்பில் காணப்படும் சமூக நிலைப்பாடு குறித்தும் அவர் கேட்டறிந்துகொண்டார். இலங்கையில் பெண்கள் மீதான நேர்மறையான அணுகுமுறைகள் இருப்பதாகவும், பெண்களுக்கு அதிகாரம் அளிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் சபாநாயகர் பதில் வழங்கினார். முதன்முறையாக பெண்களுக்கான சுயாதீன ஆணைக்குழுவொன்று நிறுவப்பட்டிருப்பதாகவும் கௌரவ சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், 2026 ஆம் ஆண்டு பரிஸ் நகரில் நடைபெறவுள்ள உலகளாவிய சமாதான உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக சபாநாயகரை பிரான்ஸிற்கு வருமாறும் பிரான்ஸ் செனட் சபை உறுப்பினர் சமந்தா கேசபோன் அழைப்பு விடுத்தார். பிரான்ஸ் பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் மற்றும் நடைமுறைகளைப் பார்வையிடுமாறும் அவர் சபாநாயகருக்கு அழைப்பு விடுத்ததுடன், இது பிரான்ஸின் சட்டமன்ற மரபுகளை நேரடியாகக் காண்பதற்கு சிறந்ததொரு சந்தர்ப்பமாக அமையும் எனத் குறிப்பிட்டுள்ளார்.














