“சுற்றறிக்கைகள் மூலம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இன்னுமொரு மிகப்பெரிய இனப்படுகொலை மற்றும் இனவழிப்பைச் செய்வதற்கு முயற்சிக்கின்றது” என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று (18) நடைபெற்ற இயற்கை அனர்த்த நிலைமைகள் குறித்த சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த இடர் நிலைமை மற்றும் அதற்குப் பின்னரான நிலைமைகள் மக்களைப் பெருமளவில் பாதித்துள்ளன. இயற்கையை இந்த நாடு சரியான முறையில் பேணவில்லை. இயற்கைக்கான பாதுகாப்புகளையும் முன்னறிவித்தல்களையும் நாட்டின் தலைவர்கள் கடந்த காலங்களில் மேற்கொள்ளாமையும், தற்போதைய அரசாங்கத்தால் இது தொடர்பான முன்னேற்பாடுகள் நடக்காத காரணத்தாலும் இந்தப் பேரிடருக்கான மிகப்பெரிய காரணங்களாக அமைந்துள்ளன.
குறிப்பாக, இந்த நாட்டில் மிகப்பெரிய இடர்கள் வரும் போது மனித உயிர்களைக் காப்பதற்கும், அழிவுகளிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கும் படைகளுக்கான பயிற்சிகள் இல்லை என்பதை இந்தப் பேரிடர் தெளிவாகக் கூறியுள்ளது. அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் படைகள்தான் இந்த நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியுள்ளது என்ற அத்தியாயம் இந்த நாட்டில் புதியதாக உருவாக்கப்பட்டுள்ளது.
நாட்டின் படைகளான இராணுவம், கடற்படை, விமானப்படை, பொலிஸ் என்பன இடர்கள் வரும்போது எவ்வாறு செயற்படுவது என்பதற்கான பயிற்சிகளைக் கொண்டிருப்பர். ஆனால், இந்த நாட்டில் அவர்கள் செயற்பட்டிருந்தாலும், அவர்களுக்காக திறன் வழங்கப்படவில்லை என்பதையே கடந்த நாட்கள் தெளிவுபடுத்தியுள்ளது.
இதேவேளை, நாட்டின் தென்பகுதிகளில் ஏற்படும் அழிவுகளுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம், செயற்பாடுகளின் வேகம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மிகக் குறைவாகவே இருக்கின்றது.
அண்மையில் நான் நெடுந்தீவுக்குச் சென்றிருந்தபோது அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் என்னிடம் கண்ணீருடன் கூறினர். அவர்களுக்கான உதவித்தொகைகளை நிறுத்தியுள்ளதாகவும் கூறினர். இப்போதும் நெடுந்தீவுக்கான போக்குவரத்து சீரானதாக இல்லை. அந்த மக்களின் நிலப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மற்றைய தீவுப்பகுதிகளில் வசிக்கும் மக்களும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். இந்தப் பகுதிகளில் நடந்த அனர்த்தங்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட வேண்டும்.
ஜனாதிபதி அடிக்கடி உரையாற்றும்போது கூறும் ஜனநாயகம், பெருந்தன்மை, மக்களுக்கான செயற்பாடு என்பன மிகப்பெரிய கேள்விகளுக்கு உட்படுத்தப்படுகின்றது. அரசாங்க கட்சி சார்பானவர்கள் அராஜகம் செய்யுமளவுக்கு நாட்டின் நிலைமை காணப்படுகின்றது. கிராம அலுவலர்கள் பணியாற்றும்போது அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர் தாக்குகின்றார். கிராம அலுவல்களை தகாத வார்த்தைகளால் பேசுகின்றனர்.
அண்மையில் ஜனாதிபதி செயலகத்தால் வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்துக்கமைய பிரஜாசக்தி வறுமை ஒழிப்பு தேசிய இயக்கமானது தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்படும் பாராளுமன்றம், மாகாண சபைகள் மற்றும் பிரதேச சபைகளின் உறுப்பினர்களின் செயற்பாடுகளை கேள்விக்கு உட்படுத்தியுள்ளது. இந்த மக்கள் பிரதிநிதிகளுக்கு என்ன பணி உள்ளது. ஆளும் கட்சியின் உறுப்பினர்கள், ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களுக்கே அந்த உரிமைகள் உள்ளன. இப்படி இருந்தால் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் பாராளுமன்றம், மாகாண சபைகள், உள்ளூராட்சி சபைகள் எதற்கு? அதனைக் கலைத்துவிடுங்கள்.
நீங்கள் கடந்த 60 ஆண்டுகளாக பொறுத்திருந்து தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்டுள்ளீர்கள். ஜனநாயக முறையில் நீங்கள் தெரிவுசெய்து வந்த பின்னர், நீங்கள் நினைப்பவர்களை ஜனாதிபதியால் நியமிக்க முடியுமென்றால் இதில் என்ன ஜனநாயகம் இருக்கின்றது. இது வெளிப்படையான அராஜகமே. பிரஜா சக்தி உறுப்பினர்கள் மிகப்பெரிய அராஜகத்தில் ஈடுபடுகின்றனர். இந்த பிரஜா சக்திக்காக பிரதேசத்தில் மக்களால் நிராகரிக்கப்பட்டவரை இதற்காக நியமிக்கின்றது.
இந்த நாட்டில் தற்போது நடப்பது உங்கள் அரசாங்கத்தின் ஜனநாயக நடைமுறையா அல்லது தேசிய மக்கள் சக்தியின் அராஜகமா நடக்கின்றது என்று கூறுங்கள்.
கடந்த ஆட்சியாளர்கள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தீர்கள். அவர்கள் ஆயுத ரீதியில் எமது மக்களை அராஜகம் மற்றும் இனப்படுகொலைகளை செய்தனர். அதனை மெதுவாக கண்ணுக்குத் தெரியாத நூதனமான முறையில் சுற்றறிக்கைகள் மூலம் தேசிய மக்கள் சக்தி இன்னுமொரு மிகப்பெரிய இனப்படுகொலை மற்றும் இனவழிப்பை நாட்டில் செய்வதற்கு முயற்சிக்கின்றது.
கடந்த கால அராஜக அரசாங்கங்கள்கூட மக்கள் பிரதிநிதிகளை இயங்க இடமளித்தனர். அவர்களின் கருத்துக்கு இடமளிக்கப்பட்டது. ஆனால், முழுமையாக கருத்துகள் இல்லாமல் செய்யப்படுகின்றது. வன்மையான முறையில் நிலைமையை ஏற்படுத்துகின்றீர்கள். மக்களுக்கான நல்லெண்ணம், புரிந்துணர்வு இருக்குமாக இருந்தால் ஏன் இவ்வாறான வேலைகளை செய்ய வேண்டும். நாங்கள் நீதியான அரசையும், கெளரவமான அரசியல் பாரம்பரியத்தையுமே எதிர்பார்க்கின்றோம். உங்களை மாற்றுங்கள். மக்கள் பிரதிநிதிகளுக்கு மதிப்பளியுங்கள் என்றார்.














