தனது முன்னாள் மனைவிக்கு 13 ஆண்டுகளாக போதைப்பொருள் கொடுத்து பாலியல் வன்புணர்வு செய்தமைக்காக முன்னாள் டோரி கவுன்சிலர் ஒருவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் மேலும் ஐந்து ஆண்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
வழக்கில் தற்போது லண்டன், என்ஃபீல்டில் வசித்து வரும் 49 வயதான பிலிப் யங் என்ற பிரதான சந்தேக நபர் மீது பாலியல் வன்புணர்வு உட்பட குறைந்தது 56 குற்றச்சாடுகள் சுமத்தப்பட்டுள்ளதாக வில்ட்ஷயர் பொலிஸார் தெரிவித்தனர்.
யங் முன்பு 2007 முதல் 2010 வரை ஸ்விண்டன் பெருநகர உள்ளூராட்சி அமைப்பின் கன்சர்வேடிவ் கவுன்சிலராக இருந்தார்.
அவர் 2010 ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் கலாச்சாரம், மீளுருவாக்கம் மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கான அமைச்சரவை உறுப்பினராக பதவி வகித்தார்.
அண்மையில் அவர் ஆலோசனை நிறுவனமான பிரசெடோவில் தலைமை இயக்க அதிகாரியாக இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த வழக்கில் யங் தவிர மேலும் ஐந்து ஆண்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையில் அவர்களது பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை.
இந்த நிலையில் குறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆறு சந்தேக நபர்களையும் இன்று ஸ்விண்டன் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை வில்ட்ஷயர் பொலிஸார் மேற்கொண்டனர்.















