ஹமாஸ் ஆயுதங்களை களையத் தவறினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
அதே நேரத்தில் ஈரானின் அணுசக்தி திட்டத்தை மீண்டும் கட்டியெழுப்ப எடுக்கும் எந்தவொரு முயற்சியையும் விரைவில் ஒழித்து முறியடிப்போம் என்றும் அச்சுறுத்தியுள்ளார்.
புளோரிடாவில் உள்ள மார்-எ-லாகோ ரிசார்ட்டில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், திங்களன்று (29) ஊடகங்களிடம் உரையாற்றும் போது ட்ரம்ப் இந்த அச்சுறுத்தலை விடுத்தார்.
அண்மைய மாதங்களில் தெஹ்ரானுடனான அணுசக்தி ஒப்பந்தம் குறித்து விவாதித்து வந்த ட்ரம்ப் நெதன்யாகுவுடனான தனது பேச்சுவார்த்தைகளின் போது, தான் மத்தியஸ்தம் செய்த பலவீனமான காசா அமைதி ஒப்பந்தத்தை முன்னெடுப்பதிலும், ஈரான் மற்றும் லெபனானில் உள்ள ஹெஸ்பொல்லா மீதான இஸ்ரேலிய கவலைகளை நிவர்த்தி செய்வதிலும் கவனம் செலுத்தியதாகக் கூறினார்.
ஜூன் மாதம் இஸ்ரேலுடன் 12 நாள் போரை நடத்திய ஈரான், இந்த மாதம் இரண்டாவது முறையாக ஏவுகணைப் பயிற்சிகளை நடத்தியதாக கடந்த வாரம் கூறியது.
ஈரானுடன் இஸ்ரேல் மோதலை விரும்பவில்லை என்றும், ஆனால் அந்த அறிக்கைகள் குறித்து அறிந்திருப்பதாகவும், தெஹ்ரானின் நடவடிக்கைகள் குறித்து ட்ரம்பிடம் எழுப்புவதாகவும் நெதன்யாகு கடந்த வாரம் கூறியமையும் குறிப்பிடத்தக்கது.

















