2026 ஐ.சி.சி ஆடவர் டி20 உலகக் கிண்ணத்துக்கு முன்னதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) தனது மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவரை மீண்டும் அணிக்குள் கொண்டு வந்துள்ளது.
அதன்படி, முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க தேசிய அணியின் ஆலோசகர் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த தகவலை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும் மலிங்கவின் பங்கு குறுகிய காலத்திற்கு மட்டுமே இருக்கும் என்றும் SLC தெரிவித்துள்ளது.
அதாவது, வரவிருக்கும் டி20 உலகக் கிண்ணத்துக்கான அணியைத் தயார்படுத்த உதவும் வகையில் அவரது நியமனம் குறுகிய கால அடிப்படையில் மட்டுமே இருக்கும் என்றும் SLC சுட்டிக்காட்டியுள்ளது.
மலிங்க டிசம்பர் 15 ஆம் திகதி முதல் அணியுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கினார்.
மேலும் 2026 ஜனவரி 25 வரை தனது சேவைகளை வழங்குவார்.
2025 டிசம்பர் 15 முதல் 2026 ஜனவரி 25 வரையான இந்த நியமனம் 40 நாட்கள் மட்டுமே என்றாலும், இது தேசிய அணியின் முக்கிய பந்து வீச்சாளர்களுடன் மலிங்க மேற்கொண்ட பணியின் தொடர்ச்சியாகும்.
மலிங்க இதற்கு முன்பு குறைந்தது இரண்டு முறை அதிகாரப்பூர்வமாக வேகப்பந்து வீச்சு ஆலோசகராக பணியாற்றியுள்ளார்.
ஆனால் பல ஆண்டுகளாக அதிகாரப்பூர்வமற்ற முறையில் சிறந்த பந்து வீச்சாளர்களுடன் பணியாற்றியுள்ளார்.
மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக சனத் ஜெயசூர்யா தலைமையிலான பயிற்சி குழுவிற்கு ஆலோசனை வழங்கி வருகிறார்.
இந்த நிலையில், மலிங்கவின் பரந்த சர்வதேச அனுபவத்தையும், குறிப்பாக குறுகிய கால வடிவத்தில் டெத் பவுலிங்கில் புகழ்பெற்ற நிபுணத்துவத்தையும் பயன்படுத்தி, வரவிருக்கும் உலகக் கிண்ணத்துக்கான இலங்கையின் ஆயத்தங்களை வலுப்படுத்த இலக்கு வைத்துள்ளதாக SLC குறிப்பிட்டுள்ளது.
இலங்கை மற்றும் இந்தியா இணைந்து நடத்தும் ஐ.சி.சி ஆடவர் டி20 உலகக் கிண்ணம் அடுத்த ஆண்டு பெப்ரவரி 7 ஆம் திகதி தொடங்கும்.
தொடக்கப் போட்டி கொழும்பில் உள்ள சிங்கள விளையாட்டுக் கழகத்தில் (SSC) நடைபெற உள்ளது.
2012 ஆம் ஆண்டுக்குப் பின்னர், 2025 பெப்ரவரி 7 ஆம் திகதி முதல் இலங்கை தனது முதல் ஆடவர் உலகளாவிய போட்டியை இணைந்து நடத்த உள்ளது.
இலங்கையின் மூன்று மைதானங்களில் (கெழும்பு, பிரேமதாச, எஸ்.எஸ்.சி, மற்றும் கண்டி பல்லேகல) போட்டி நடைபெறும்.
அவுஸ்திரேலியா, அயர்லாந்து, ஓமன் மற்றும் சிம்பாப்வே ஆகிய அணிகளுடன் இலங்கை குழு B இல் உள்ளது.















