கடந்த வாரம் காணாமல் போனதாகக் கூறப்பட்ட 27 வயது இந்தியப் பெண் ஒருவர் அமெரிக்காவில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் அவரது முன்னாள் காதலனை பொலிஸார் தேடி வருகின்றனர்.
அவர் அவளைக் கொன்று இந்தியாவுக்கு தப்பிச் சென்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
எலிகாட் நகரத்தைச் சேர்ந்த நிகிதா கோடிஷாலா (Nikitha Godishala) ஜனவரி 2 ஆம் திகதி காணாமல் போனதாக முறைப்பாடு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (04) ஹோவர்ட் கவுண்டி பொலிஸார் ஒரு அறிக்கையில், அவரது முன்னாள் காதலன் அர்ஜுன் சர்மா ( வயது 26) என்பவரின் கொலம்பியா, மேரிலாந்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கத்திக்குத்து காயங்களுடன் நிகிதா கோடிஷாலா இறந்து கிடந்ததாகக் கூறினர்.
முதல் மற்றும் இரண்டாம் நிலை கொலைக் குற்றச்சாட்டுகளின் கீழ் சர்மாவைக் கைது செய்வதற்கான பிடியாணையை பொலிஸார் பெற்றுள்ளனர்.
வொஷிங்டன் டிசியில் உள்ள இந்திய தூதரகம், கோடிஷாலாவின் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாகவும், சாத்தியமான அனைத்து தூதரக உதவிகளையும் வழங்கி வருவதாகவும் எக்ஸில் ஒரு பதிவில் தெரிவித்துள்ளது.



















