ஐசிசியின் ஆடவர் டி20 உலகக் கிண்ணத்தில் தனது போட்டிகளை இந்தியாவிலிருந்து வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்ற பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை (BCB) சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் நிராகரித்துள்ளது.
இரு அமைப்புகளுக்கும் இடையிலான ஒரு மெய்நிகர் சந்திப்பின் போது இந்த முடிவு தெரிவிக்கப்பட்டது.
பங்களாதேஷ் போட்டிக்காக இந்தியா செல்ல வேண்டும் அல்லது போட்டியில் புள்ளிகளை இழக்க நேரிடும் என்று ஐ.சி.சி. இதன்போது தெளிவுபடுத்தியது.
போட்டி அட்டவணை மற்றும் இடங்கள் மாறாமல் இருக்கும் என்று ஐ.சி.சி.பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்திடம் உறுதியாக கூறியுள்ளதாக நம்பகத் தகுந்த வட்டாரங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், நிராகரிப்பை உறுதிப்படுத்தும் எந்த அதிகாரப்பூர்வ தகவல்தொடர்பும் இதுவரை தங்களுக்கு கிடைக்கவில்லை என்று BCB வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
பங்களாதேஷ் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மான் இந்தியன் பிரீமியர் லீக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கும், BCBக்கும் இடையே பதட்டங்கள் கடுமையாக அதிகரித்தன.
பங்களாதேஷில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் குறித்த செய்திகள் தொடர்பாக இந்தியாவில் அரசியல் ரீதியாக எழுந்த பின்னடைவின் மத்தியில் முஸ்தாபிசுரின் ஒப்பந்தத்தை இரத்து செய்யுமாறு BCCI கொல்கத்தா நைட் ரைடர்ஸிடம் கேட்டுக் கொண்டது.
முஸ்தாபிசுரின் விடுவிப்பினைத் தொடர்ந்து, நிலைமையை மதிப்பிடுவதற்காக BCB அவசரக் கூட்டத்தைக் கூட்டியது.
பின்னர் அதன் வீரர்கள் T20 உலகக் கிண்ணத்துக்காக இந்தியாவுக்குச் சென்றால் அவர்களின் பாதுகாப்பு குறித்து கவலைகளை வெளிப்படுத்தி ஐசிசிக்கு கடிதம் எழுதினார்.
அதேநேரம், பங்களாதேஷ் அரசாங்கம், நாட்டில் இந்தியன் பிரீமியர் லீக் (IPL) ஒளிபரப்பை காலவரையின்றி நிறுத்தி வைக்கவும் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை பங்களாதேஷ் அரசாங்கம் திங்கள்கிழமை (05) நிறைவேற்றியது.
இதன் விளைவாக, நாட்டில் உள்ள ரசிகர்கள் இனி எந்த தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் அல்லது ஸ்ட்ரீமிங் தளத்திலும் IPL போட்டிகளை சட்டப்பூர்வமாகப் பார்க்க முடியாது.


















