ஈரான் நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ள பணவீக்கம், அதன் தொடர்ச்சியாக அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, பொருளாதார தேக்கநிலை உள்ளிட்டவற்றால் விரக்தி அடைந்துள்ள மக்கள் அரசுக்கு எதிராக தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28-ந்தேதி தொடங்கிய மக்களின் போராட்டம், ஈரானின் 31 மாகாணங்களில் 100 நகரங்களில் 16-வது நாளாக இன்றும் நீடித்து வருகிறது.
இந்த நிலையில், அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள செய்தியில், ஈரானில் ஏற்பட்டு உள்ள போராட்டம் வன்முறையாக உருவாக கூடிய வாய்ப்புகள் உள்ளன. இதனால், கைது நடவடிக்கைகளும், காயங்களும் ஏற்பட கூடும். ஈரான் அரசு அதிகாரிகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர் என்று குறிப்பிட்டு உள்ளது. வீதிகள் முடக்கம், பொது போக்குவரத்து பாதிப்புகள் மற்றும் இணையதளம் முடக்கம் எல்லாம் நடந்து கொண்டிருக்கின்றன.
அதனால், அமெரிக்க குடிமக்கள் உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படியும், தரை வழியே அர்மீனியா மற்றும் துருக்கி நாடுகளுக்கு செல்லும்படியும் அறிவுறுத்தல் வழங்கி உள்ளது.

















