இந்தியாவுக்கான அமெரிக்க துாதராக நேற்று பொறுப்பேற்ற செர்ஜியோ கோர், ”இந்தியாவை தவிர, வேறு எந்த நாடும் எங்களுக்கு முக்கியமல்ல எனவும் பிரதமர் மோடியுடனான, அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் நட்பு உண்மையானது, எனவும் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
இந்திய பொருட்கள் மீது 50 சதவீத வரி விதிப்பதாக, அமெரிக்க ஜனதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த நாள் முதல் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
அண்மையில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திக்கொள்ள வேண்டும் என கூறி, அமெரிக்க ஜனாதிபதி பிரதமர் மோடிக்கு அழுத்தம் கொடுத்தார்.
இதனால், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவு பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்க வரி விதிப்பால், இந்திய வர்த்தகர்கள் பாதிப்படைவதை தடுக்க, ஐரோப்பா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுடன் பிரதமர் மோடி வர்த்தக ஒப்பந்தம் செய்து வருகிறார்.
மேலும், ஜனாதிபதி டிரம்புடன் பேசுவதை கூட, பிரதமர் மோடி தவிர்த்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில், இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தக உடன்பாடு குறித்த அடுத்தக் கட்ட பேச்சுவார்த்தை இன்று துவங்கவுள்ளது.
இதையொட்டி, டில்லிக்கு வருகைதந்த அமெரிக்க துாதர் செர்ஜியோ கோர், இரு நாடுகளுக்கு இடையே நிலவும் மனக்கசப்பு விரைவில் நீங்கும், என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதேவேளை அழைப்பு வரும் பொழுது , அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அடுத்த ஆண்டோ, அல்லது அதற்கு அடுத்த ஆண்டோ நிச்சயம் இந்தியாவுக்கு வருகைதருவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்














