வர்த்தகப் போர் மற்றும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இணைப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக அமெரிக்காவுடன் கனடா நிச்சயமற்ற உறவுகளை எதிர்கொள்ளும் நேரத்தில், கனடாவின் பிரதமர் மார்க் கார்னி செவ்வாய்க்கிழமை (14) சீனாவுக்குப் புறப்படுகிறார்.
அங்கு அவர் வர்த்தகம், சர்வதேச பாதுகாப்பு குறித்து பெய்ஜிங்கின் உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
2017 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கனேடிய பிரதமர் ஒருவர் சீனாவுக்கு பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறை.
மேலும், கனடா புதிய வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு கூட்டாண்மைகளை நாடுவதால், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் இது ஒரு முக்கியமான மாற்றத்தைக் குறிக்கலாம்.
கடந்த ஒக்டோபரில் கார்னி, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கும் தென் கொரியாவில் சந்தித்தபோது சீனாவுக்குச் செல்ல ஒப்புக்கொண்டனர்.
முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கீழ் ஏற்பட்ட விரிசல் உறவுக்குப் பின்னர் ஆழமான உறவுகளுக்கான சாத்தியக்கூறுகளை இந்த விஜயம் எடுத்துரைத்துள்ளது.
2018 இல் சீன நிறுவனமான ஹவாய் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியை கனடா கைது செய்த பின்னர் இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மோசமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

















