இந்து சமுத்திரத்தில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த சாக்கோஸ் (Chagos) தீவுகளின் இறையாண்மையை மொரிஷியஸிடம் ஒப்படைக்க பிரித்தானியா எடுத்துள்ள முடிவை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.இதனை ஒரு “மிகப்பெரிய முட்டாள்தனம்” (Great Stupidity) என்று அவர் வர்ணித்துள்ளார்.
தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், இந்தப் போக்கு அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று குறிப்பிட்டுள்ளார்.
சாக்கோஸ் தீவுகளில் ஒன்றான ‘டியாகோ கார்சியா’ (Diego Garcia) தீவில் மிக முக்கியமான அமெரிக்க இராணுவத் தளம் அமைந்துள்ள நிலையில், எந்த காரணமும் இன்றி அதனை மொரிஷியஸிடம் ஒப்படைப்பது பலவீனமான செயல் என அவர் கூறியுள்ளார்.
மேற்குலக நாடுகளின் இத்தகைய பின்வாங்கல் போக்கை சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் கவனித்துக் கொண்டிருப்பதாகவும், இது அவர்களின் ஆதிக்கத்திற்கு வழிவகுக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
சாக்கோஸ் தீவுக்கூட்டம் பல தசாப்தங்களாக பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் இருந்தது. அங்குள்ள மிகப்பெரிய தீவான டியாகோ கார்சியாவில் அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவின் கூட்டு இராணுவத் தளம் இயங்கி வருகிறது.
இருப்பினும், டியாகோ கார்சியாவில் உள்ள இராணுவத் தளத்தை அடுத்த 99 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து பயன்படுத்தும் வகையில் பிரித்தானியா குத்தகை ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்தநிலையில், ட்ரம்ப்பின் விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ள பிரித்தானிய அரச தரப்பு, இந்த ஒப்பந்தம் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவே செய்யப்பட்டது என்று கூறியுள்ளது.
சர்வதேச நீதிமன்றத் தீர்ப்புகள் மற்றும் சட்ட சிக்கல்களால் இராணுவத் தளத்தின் எதிர்காலத்திற்குப் பாதிப்பு ஏற்படாமல் இருக்கவே இந்தத் தீர்வு எட்டப்பட்டதாக பிரித்தானிய அரசு விளக்கமளித்துள்ளது.















