சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது புதன்கிழமை (21) 4,800 அமெரிக்க டொலர்களையும் விஞ்சியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கிரீன்லாந்து மீதான நாட்டம் ஐரோப்பாவுடன் மீண்டும் ஒரு வர்த்தகப் போர் அச்சுறுத்தலை தூண்டியுள்ள நிலையில் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
புதன்கிழமை காலை GMT நேரப்படி 02.26 மணியளவில் ஸ்பாட் தங்கம் ஒரு அவுன்ஸ் ஒன்றுக்கு 1.2% உயர்ந்து 4,821.26 அமெரிக்க டொலர்களாக இருந்தது.
அதேநரேம், பெப்ரவரி மாதத்திற்கான அமெரிக்க தங்க எதிர்காலம் 1% உயர்ந்து அவுன்ஸ் ஒன்றுக்கு $4,813.50 ஆக இருந்தது.
பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரமின்மையின் போது பாதுகாப்பான சொத்தாகக் கருதப்படும் தங்கத்தின் விலை 2025 ஆம் ஆண்டில் 64% உயர்ந்தது.
மேலும் இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து மேலும் 10% அதிகரித்துள்ளது.
அமெரிக்க வட்டி விகிதக் குறைப்புகளின் எதிர்பார்ப்புகளும் இந்த உலோகத்தின் ஏற்றத்திற்கு துணைபுரிந்துள்ளன.
அதேநேரம்,செவ்வாய்க்கிழமை 95.87 அமெரிக்க டொலர்கள் என்ற சாதனை அளவை எட்டிய பின்னர் ஸ்பாட் வெள்ளி ஒரு அவுன்ஸ் புதன்கிழமை (21) 1% குறைந்து 93.59 அமெரிக்க டொலர்களாக இருந்தது.
ஸ்பாட் பிளாட்டினம் ஒரு அவுன்ஸ் ஒன்றுக்கு 0.7% குறைந்து $2,445.96 ஆகவும், பல்லேடியம் 0.5% குறைந்து $1,857.19 ஆகவும் பதிவானது.
இலங்கை நிலவரம்;
கொழும்பு, செட்டியார் தெருவின் தங்க விலைகளுக்கு அமைவாக இலங்கையில் இன்று (21) 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது 380,000 ரூபாவாக காணப்படுகிறது.
அதேநேரம், 22 கரட் தங்கத்தின் விலையானது 351,500 ரூபாவாக காணப்படுவதாக அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொதுச் செயலாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.













