சர்வதேச இராஜதந்திர நடைமுறைகள் மற்றும் தொடர்புடைய சட்டங்களுக்கு முழுமையாக இணங்க பிரித்தானியாவில் தனது புதிய தூதரகக் கட்டிடத்தை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளதாக பெய்ஜிங்கின் வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இந்தத் திட்டங்களுக்கான ஒப்புதல் செயல்முறை சர்வதேச இராஜதந்திர விதிமுறைகள் மற்றும் பிரிட்டிஷ் சட்ட நடைமுறைகளைப் பின்பற்றியது என்று வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் இன்று (21) நடைபெற்ற வழக்கமான ஒரு செய்தியாளர் கூட்டத்தில் குறிப்பிட்டார்.
உளவு பார்ப்பதற்கான தளமாக சீனா பயன்படுத்தப்படலாம் என்ற பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க அரசியல்வாதிகளின் எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், பெய்ஜிங்குடனான உறவை மேம்படுத்தும் நம்பிக்கையில், ஐரோப்பாவில் அதன் மிகப்பெரிய தூதரகத்தை லண்டனில் நிர்மாணிப்பதற்கு செவ்வாயன்று (20) பிரித்தானியா ஒப்புதல் அளித்தது.
இரண்டு நூற்றாண்டு பழமையான ரோயல் மின்ட் கோர்ட் இருந்த இடத்தில் புதிய தூதரகத்தைக் கட்டும் பெய்ஜிங்கின் திட்டங்கள், உள்ளூர்வாசிகள், சட்டமியற்றுபவர்கள் மற்றும் பிரித்தானியாவில் உள்ள ஹொங்கொங் ஜனநாயக ஆதரவு பிரச்சாரகர்களின் எதிர்ப்பால் மூன்று ஆண்டுகளாக முடங்கின.
எவ்வாறெனினும் தூதரகத்தை அமைப்பதற்காக ஜனவரி 20 ஆம் திகதி வழங்கப்பட்டுள்ள அனுமதி அடுத்த வாரம் இங்கிலாந்துப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் சீனாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக எதிர்பார்க்கப்படுவதற்கு முன்னதாக வந்துள்ளது.
2018 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஒரு பிரிட்டிஷ் தலைவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.














