அடுத்த வாரம் திட்டமிடப்பட்டுள்ள இங்கிலாந்துப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் பெய்ஜிங் விஜயத்தின் போது பிரித்தானியாவும் சீனாவும் ”பொற்காலம்” என்ற வணிக உரையாடலை மீண்டும் உயிர்பிக்க இலக்கு வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தக் கலந்ரையாடலில் இரு தரப்பிலிருந்தும் பல உயர் நிர்வாகிகள் பங்கெடுப்பார்கள் என்று இந்த விடயத்தை நன்று அறிந்த வட்டாரங்களை மேற்கொள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை தகவல் வெளியிட்டுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட “பிரித்தானியா-சீனா தலைமை நிர்வாக அதிகாரி கவுன்சிலில்” புதிதாக இணையவுள்ள பிரிட்டிஷ் நிறுவனங்களில் அஸ்ட்ராஜெனெகா, பிபி, எச்எஸ்பிசி, இன்டர்காண்டினென்டல் ஹோட்டல்ஸ் குரூப், ஜாகுவார் லேண்ட் ரோவர், ரோல்ஸ் ராய்ஸ், ஷ்ரோடர்ஸ் மற்றும் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் ஆகியவை அடங்கும்.
சீனத் தரப்பை பேங்க் ஆஃப் சீனா, சீனா கட்டுமான வங்கி, சீனா மொபைல், தொழில்துறை மற்றும் வணிக வங்கி, சீனா ரயில் மற்றும் ரோலிங் ஸ்டாக் கார்ப்பரேஷன், சீனா தேசிய மருந்துக் குழுமம் மற்றும் BYD உள்ளிட்ட நிறுவனங்கள் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்று வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
பொற்காலக் கலந்துரையாடல் தொடர்பில் இரு தரப்பினரிடையிலும் சிறிது காலமாக பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
எனினும், ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய தூதரகத்தை லண்டனில் கட்ட சீனாவுக்கு ஜனவரி 20 அன்று இங்கிலாந்து ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் இப்போதுதான் தீவிரமாகத் தொடங்கியுள்ளன என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
இரு தரப்பினருக்கும் இடையிலான உறவுகளின் பொற்காலத்தில் இந்த கவுன்சில் முதலில் 2018 ஆம் ஆண்டு அப்போதைய இங்கிலாந்துப் பிரதமர் தெரசா மே மற்றும் அப்போதைய சீனப் பிரதமர் லி கெக்கியாங்கால் ஆரம்பிக்கப்பட்டது.
இது இரு நாடுகளின் பெரிய நிறுவனங்களின் தலைமை இயக்குனர்கள் மற்றும் தொழில் தலைவர்களை ஒன்றாகக் கூட்டி, பிரித்தானியா மற்றும் சீனா இடையேயான வணிக மற்றும் முதலீட்டு தொடர்புகளை வலுப்படுத்தும் பொருட்டு உருவாக்கப்பட்டது.














