கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு (திருத்த) சட்டமூலத்தில் நேற்று தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தியதாக சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
இந்த சட்டமூலம் 2025.12.05 ஆம் திகதி நாடாளுமன்றறத்தில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், 2026.01.07 ஆம் திகதி நிறைவேற்றப்பட்டது.
கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு (திருத்த) சட்டமூலம், 2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க முதன்மைச் சட்டத்தை திருத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்டதுடன், கரைகடந்த வங்கித்தொழில் மற்றும் வரி தொடர்பான ஒழுங்குபடுத்தலையும் மேற்பார்வையையும் மேம்படுத்தல், செயல்நுணுக்க முக்கியத்துவம்வாய்ந்த வியாபாரங்கள் (BSI) தொடர்பான அளவுகோல்களை மேலும் திருத்தி தெளிவுபடுத்தல் இதன் நோக்கமாகும்.
இந்தத் திருத்தம் மூலம் பிராந்தியத்தில் நிதிசார் நடவடிக்கைகள் தொடர்பில் கடுமையான மேற்பார்வை அறிமுகப்படுத்தப்படுவதுடன், விசேடமாக சர்வதேச தரநிலைகளுக்கு அமைய கரைகடந்த வங்கித்தொழிலை ஒழுங்குபடுத்துவதற்கும், மேற்பார்வை செய்வதற்கும் இலங்கை மத்தியவங்கிக்கு அதிகாரமளிக்கப்படுகின்றது.
அத்துடன், இந்த சட்டமூலத்தின் ஊடாக துறைமுக நகரத்தின் பொருளாதார கட்டமைப்பை, உலகளாவிய வங்கித்தொழில் தேவைகள் மற்றும் தேசிய நிதிசார் ஸ்திரத்தன்மை என்பவற்றுடன் சமநிலைப்படுத்தலும் மேற்கொள்ளப்படுகின்றது.
அதற்கமைய, கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு (திருத்த) சட்டமூம், 2026 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு (திருத்த) சட்டமாக நடைமுறைக்கு வருகின்றது.














