2026 டி20 உலகக் கிண்ணத்தில் தனது போட்டிகளை இந்தியாவில் இருந்து மாற்ற வேண்டும் என்ற பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்தின் (PCB) கோரிக்கையை சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் (ICC) நிராகரித்துள்ளது.
புதன்கிழமை (21) அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்ட ஐசிசியின் அவசரக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
ஐசிசியின் 16 உறுப்பினர்களில் இருவரைத் (பாகிஸ்தான், பங்களாதேஷ்) தவிர ஏனைய அனைவரும் டி20 உலகக் கிண்ண அட்டவணையில் எந்த மாற்றத்தையும் செய்வதற்கு எதிராக வாக்களித்தனர்.
மேலும், தனது இறுதி முடிவை அறிவிக்க பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்துக்கு ஐசிசி 24 மணிநேரம் அளித்துள்ளதாகவும் வடாரங்கள் தெரிவித்தன.
போட்டிக்காக இந்தியாவுக்குப் பயணம் செய்வதில்லை என்ற நிலைப்பாட்டில் பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் உறுதியாக இருந்தால் தொடரில் பங்களாதேஷ் நீக்கப்பட்டு ஸ்கொட்லாந்து உள்வாங்கப்படும்.
இந்தியன் பிரீமியர் லீக் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆலோசனையின் பேரில் பங்களாதேஷ் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மானை விடுவித்ததைத் தொடர்ந்து, பாதுகாப்பு கவலைகள் காரணமாக, ஐசிசியின் உலகக் கிண்ணப் போட்டிகளில் தனது ஆட்டங்களை இந்தியாவில் இருந்து இலங்கைக்கு மாற்றுமாறு பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் ஐசிசிக்கு கோரிக்கை விடுத்தது.
அதன் பின்னர், பிசிபி மற்றும் ஐசிசி பலமுறை கூட்டங்களை நடத்தின.
ஆனால், பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் தங்கள் போட்டிகளை இந்தியாவில் விளையாடுவதில்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது.
இந்த நிலையில் எதிர்வரும் டி20 உலகக் கிண்ணத்தில் பங்களாதேஷை மாற்றும் அணியாக ஸ்கொட்லாந்து இருக்கும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஐசிசியுடன் கிரிக்கெட் ஸ்கொட்லாந்து எந்த அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்று ஊடக அறிக்கைகள் தெரிவித்தன.
2009 ஆம் ஆண்டு, அரசியல் காரணங்களுக்காக இங்கிலாந்தில் நடந்த டி20 உலகக் கிண்ணத்தில் இருந்து சிம்பாப்வே விலகியது, அதன் பின்னர் ஸ்கொட்லாந்து அணி அதற்குப் பதிலாக போட்டியில் விளையாடியது.













