கிரீன்லாந்தை கையகப்படுத்தும் தனது திட்டங்களை எதிர்த்த ஐரோப்பிய நட்பு நாடுகள் மீது அதிக வரிகளை விதிக்கும் தீர்மானங்களிலிருந்து அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் புதன்கிழமை (21) பின்வாங்கினார்.
அதேநேரம், நேட்டோவுடனான பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், கிரீன்லாந்து குறித்த சாத்தியமான ஒப்பந்தத்தை அமெரிக்கா ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது குறித்து சமூக ஊடகங்களில் சில விடயங்களை மாத்திரம் முன்வைத்த ட்ரம்ப், நேட்டோ தலைவருடனான “மிகவும் பயனுள்ள சந்திப்பு” கிரீன்லாந்து மற்றும் ஆர்க்டிக் தொடர்பான சாத்தியமான ஒப்பந்தத்தின் கட்டமைப்பிற்கு வழிவகுத்ததாகக் கூறினார்.
இந்த சந்திப்பை மிகவும் பயனுள்ளது என்று நேட்டோ விவரித்தது – மேலும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ள கட்டமைப்பின் மீதான விவாதங்கள் ஆர்க்டிக் பாதுகாப்பை உறுதி செய்வதில் கவனம் செலுத்தும் என்றும் கூறியது.
முன்னதாக சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடந்த உலகப் பொருளாதார மாநாட்டில் ட்ரம்ப், கிரீன்லாந்து விடயத்தில் இராணுவ பலத்தைப் பயன்படுத்தப் போவதில்லை என்றும், அந்தப் பிரதேசத்தின் உரிமையைப் பெற பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகவும் கூறினார்.
இந்த நிலையில் புதன்கிழமை இது குறித்து ட்ரூத் சமூக ஊடகப் பதிவில் ட்ரம்ப்,
கிரீன்லாந்து மற்றும் உண்மையில் முழு ஆர்க்டிக் பிராந்தியத்திற்கும் எதிர்கால ஒப்பந்தத்திற்கான கட்டமைப்பை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.
இந்த தீர்வு நிறைவேறினால் அது அமெரிக்காவிற்கும், அனைத்து நேட்டோ நாடுகளுக்கும் ஒரு சிறந்த தீர்வாக இருக்கும் – என்றார்.
எனினும், தன்னாட்சி பெற்ற டேனிஷ் சார்பு பிரதேசத்தின் அமெரிக்க உரிமையை இந்த திட்டம் உள்ளடக்கியதா என்று அவர் கூறவில்லை.
கிரீன்லாந்தை கையகப்படுத்தும் தனது திட்டங்களை எதிர்த்த எட்டு ஐரோப்பிய நாடுகளின் அமெரிக்காவிற்குச் செல்லும் ஏற்றுமதிகள் மீது அதிக வரிகளை விதிக்கப் போவதாக ட்ரம்ப் கடந்த வார இறுதியில் அச்சுறுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.













