ஜப்பானின் முதல் பெண் பிரதமரான சனே தகாய்ச்சி இன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தைக் கலைத்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பெப்ரவரி மாதம் 08 ஆம் திகதி ஜப்பானில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
பதவியேற்ற மூன்றே மாதங்களில், ஜப்பானியப் பிரதமர் சனே தகாய்ச்சி அந்நாட்டின் கீழ் சபையைக் கலைத்துள்ளார். தனது செல்வாக்கை உறுதிப்படுத்தவும், ஆளுங்கட்சியின் பலத்தை அதிகரிக்கவும் அவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.
2025 ஆம் ஆண்டு ஒக்டோபரில் ஜப்பானின் முதல் பெண் பிரதமராகத் தெரிவு செய்யப்பட்ட சனே தகைச்சி, தற்போது 70 சதவீத மக்கள் ஆதரவுடன் செல்வாக்கு மிக்க தலைவராகத் திகழ்கிறார்.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, பெப்ரவரி மாதம் 08 ஆம் திகதி வாக்குப்பதிவு நடைபெறும். இதற்கான உத்தியோகபூர்வ பிரசாரம் ஜனவரி 27 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது.
தாய்வான் விவகாரத்தில் சனே தகாய்ச்சி எடுத்துள்ள உறுதியான நிலைப்பாடு சீனாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே தூதரக மற்றும் பொருளாதார ரீதியான உரசல் அதிகரித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஜப்பான் தனது இராணுவச் செலவினங்களை அதிகரிக்க வேண்டும் என அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், சனே தகாய்ச்சி அதனைச் சமாளிக்க வேண்டியுள்ளது.
விலைவாசி அதிகரிப்பு மற்றும் பொருளாதாரத் தேக்கநிலையைச் சரிசெய்ய புதிய வரவு – செலவு தாக்கல் செய்யப்பட வேண்டிய சூழலில், இந்தத் தேர்தல் அறிவிப்பு எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்படுகிறது.
2024 ஆம் ஆண்டு தேர்தலில் ஆளுங்கட்சியான LDP பெரும் பின்னடைவைச் சந்தித்தது. தற்போது பிரதமரின் தனிப்பட்ட செல்வாக்கைப் பயன்படுத்தி, நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சிக்கான பெரும்பான்மையை வலுப்படுத்த சனே தகாய்ச்சி திட்டமிட்டுள்ளார். “மக்கள் என் மீது நம்பிக்கை வைத்துள்ளார்களா என்பதை அவர்களே தீர்மானம் செய்யட்டும்” என அவர் இது தொடர்பில் தெரிவித்துள்ளார்.
















