டித்வா சூறாவளியால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்காக இலங்கை வந்த சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகளுக்கும், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (28) காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
கடந்த 22 ஆம் திகதி நாட்டிற்கு வந்த சர்வதேச நாணய நிதியக் குழு நாடு முழுவதும் பயணம் செய்து, டித்வா சூறாவளியால் ஏற்பட்ட சேதங்களை நேரில் பார்வையிட்டதுடன், அதன் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களையும் சந்தித்தது.
இலங்கையின் பொருளாதாரம் படிப்படியாக மீண்டு வந்த நேரத்தில் ஏற்பட்ட இந்தப் பேரழிவு குறித்தும், அதன் விளைவாக மக்கள் எதிர்கொள்ளும் கடுமையான சிரமங்கள் குறித்தும் பிரதிநிதிகள் தங்கள் வருத்தத்தைத் தெரிவித்தனர்.
இருப்பினும், பேரிடரால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளும் அதே வேளையில், பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நிவாரணம் வழங்குதல், உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு மீட்டெடுப்பது போன்றவற்றில் அரசாங்கம் எடுத்த விரைவான நடவடிக்கைகளை அவர்கள் பாராட்டினர்.
மேலும், தாங்கள் பேசிய பல பொதுமக்கள், அரசாங்கம் பதிலளித்த விதத்திற்கு பாராட்டு தெரிவித்ததாகவும், இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனை என்று வர்ணித்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
கடந்த ஆண்டு முழுவதும் இலங்கை அரசாங்கத்தால் பராமரிக்கப்பட்ட வலுவான நிதி ஒழுக்கம் இந்த சவாலை எதிர்கொள்வதில் ஒரு முக்கிய காரணியாக இருந்தது என்றும் IMF பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.
திறைசேரியில் இருந்த உபரி மூலம் ரூ. 500 பில்லியன் குறைநிரப்புத் தொகை முன்வைக்கும் அரசாங்கத்தின் திறன் சாத்தியமானது என்றும், இது மிகவும் பாராட்டத்தக்க வளர்ச்சி என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
கடுமையான பேரிடர் சூழ்நிலையை எதிர்கொண்ட போதிலும் இலங்கை தற்போது சரியான பொருளாதார திசையில் நகர்ந்து வருவதை வலியுறுத்திய சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள், இலங்கையுடன் செயல்படுத்தப்பட்டு வரும் விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டம் தொடர்பான ஒப்பந்தத்தில் எந்த மாற்றங்களும் இருக்காது என்று தெரிவித்தனர்.
திட்டத்தின் கீழ் ஆறாவது தவணையை வெளியிடுவது தொடர்பான விவாதங்கள் மார்ச் மாதத்தில் மீண்டும் தொடங்கும் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
இந்த பேரிடர் ஏழை கிராமப்புற சமூகங்களை மிகவும் கடுமையாகப் பாதித்துள்ளதாகவும், கிராமப்புற உள்கட்டமைப்பு மற்றும் வாழ்வாதாரங்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளதாகவும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இதன்போது குறிப்பிட்டார்.
அதன்படி, கிராமப்புற வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கவும் வருமானம் ஈட்டும் நடவடிக்கைகளை மீட்டெடுக்கவும் ரூ. 500 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த நடவடிக்கை எந்த வகையிலும் முறையான நிதி மேலாண்மை அல்லது நிதிப் பொறுப்பிலிருந்து விலகுவதைக் குறிக்காது என்று ஜனாதிபதி மேலும் வலியுறுத்தினார்.
பேரியல் பொருளாதார குறிகாட்டிகளில் பிரதிபலிக்கும் நன்மைகள் சாதாரண குடிமக்களை உண்மையிலேயே சென்றடைவதை உறுதி செய்வதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் மற்றும் சமீபத்திய பொருளாதார சரிவு போன்ற நிகழ்வுகளால் நீண்டகாலமாக துன்பங்களைச் சந்தித்த மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
எதிர்கால அரசாங்கத் திட்டங்கள் அனைத்தும் இந்த திசைக்கு ஏற்ப திட்டமிடப்பட்டுள்ளன என்றும், இந்த விடயத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்ச்சியான ஆதரவை இலங்கை எதிர்பார்க்கிறது என்றும் ஜனாதிபதி மேலும் கூறினார்.
தற்போதுள்ள ஒப்பந்தத்தில் எந்த மாற்றமும் செய்யாமல் விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த இரு தரப்பினரும் சந்திப்பின் போது ஒப்புக்கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் இலங்கை அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி தொழிலாளர் அமைச்சரும் பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜெயந்த பெர்னாண்டோ, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, ஜனாதிபதியின் மூத்த பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ மற்றும் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சர்வதேச நாணய நிதியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர்களில் ஆசியா மற்றும் பசிபிக் துறையின் பணிப்பாளர் கிருஷ்ணா ஸ்ரீனிவாசன், ஆசியா மற்றும் பசிபிக் பிரதிப் பணிப்பாளர் இசஞ்சயா பந்த், மிஷன் தலைவர் இவான் பாபகேர்ஜியோ மற்றும் வதிவிடப் பிரதிநிதி மார்த்தா வோல்டெமைக்கேல் உள்ளிட்டோர் அடங்குவர்.


















