தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் கீரிப்பிள்ளை கடித்ததன் விளைவாக ‘நீர் வெறுப்பு நோயால் பாதிக்கப்பட்டு 7 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
மூன்று மாதங்களுக்கு முன்பு, வீட்டிற்குள் கோழியைப் பிடிக்க வந்த கீரிப்பிள்ளை ஒன்று, உறங்கிக் கொண்டிருந்த குறித்த சிறுவனின் கையைக் கடித்துள்ளது. காயம் ஏற்பட்ட சமயத்தில், பெற்றோர் உரிய மருத்துவச் சிகிச்சை அளிக்காமல், மருந்தகம் ஒன்றில் மாத்திரை வாங்கித் தந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு, கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுவனுக்குத் திடீரென கடும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து, திருவாரூர் அரச மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறுவன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சை பெற்று வந்த சிறுவன், கடந்த திங்கட்கிழமை நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழப்பதற்கு முன்னதாக, சிறுவன் கீரியை போலவே விசித்திரமான செய்கைகளைச் செய்ததாகவும், தண்ணீரைப் பார்த்து அச்சமடைந்ததாகவும் சிறுவனின் தந்தை கூறுகிறார்.
கடித்த காயத்தை முறையாகக் கவனிக்காததால் வைரஸ் மூளையைப் பாதித்ததே இந்த உயிரிழப்புக்குக் காரணம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.




















