எட்டு ஆண்டுகளின் பின்னர் ஒரு பிரிட்டிஷ் தலைவரின் முதல் பயணமாக பெய்ஜிங் சென்றுள்ள இங்கிலாந்துப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் வியாழக்கிழமை (29) சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை சந்துத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பெய்ஜிங்கின் மக்கள் மண்டபத்தில் நடந்த சந்திப்பைத் தொடர்ந்து இரு தலைவர்களும் நெருக்கமான மூலோபாய கூட்டாண்மைக்கு அழைப்பு விடுத்தனர்.
இங்கிலாந்து பொருளாதாரத்தை உயர்த்த சீனாவுடன் ஒரு நவீன உறவை உருவாக்க விரும்புவதாக ஸ்டார்மர் இந்த சந்திப்பின் போது ஜி ஜின்பிங்கிடம் கூறினார்.
பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளின் மீள்கட்டமைப்பினை குறிக்கும் வகையில் இந்த அழைப்பு வந்தது.
நான்கு நாள் சீனப் பயணத்தின் ஸ்டார்மர், சீனப் பிரதமர் லி கியாங்கையும் சந்திக்கவுள்ளார்.
மத்திய இடதுசாரி தொழிலாளர் கட்சி அரசாங்கத்தின் தலைவரான ஸ்டார்மர், தான் வாக்குறுதியளித்த வளர்ச்சியை வழங்க போராடி வருகிறார்.
சீனா தொடர்பில் உளவு பார்த்தல், மனித உரிமைகள் குறித்த நீடித்த சந்தேகங்கள் இருந்தபோதிலும், உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்துடனான உறவுகளை மேம்படுத்துவதை முன்னுரிமையாகக் கொண்டுள்ளார்.
இறுதியாக இங்கிலாந்துப் பிரதமராக தெரேசா மே 2018 ஆம் ஆண்டு சீனாவுக்கு விஜயம் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.















