ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்பில் தற்சமயம் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான ஐசிசி 19 வயதுக்குட்பட்டோருக்கான 2026 ஒருநாள் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் வைபவ் சூரியவன்ஷி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இன்னிங்ஸில் மொத்தமாக 80 பந்துகளை எதிர்கொண்ட அவர் 15 சிக்ஸர்கள் மற்றும் 15 பவுண்டரிகள் அடங்கலாக 175 ஓட்டங்களை குவித்தார்.
இந்த இன்னிங்ஸில் அவர் ஐசிசி ஒருநாள் இறுதிப் போடியில் மிக வேகமாக சதம் அடித்த இளைய வீரர் என்ற பெருமையையும் 14 வயதான வைபவ் சூரியவன்ஷி பெற்றார்.
அதன்படி, அவர் 55 பந்துகளில் சதம் விளாசினார்.
மேலும் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் கிரிக்கெட் வடிவில் வேகமான 150 ஓட்டங்களை எட்டினார் (71 பந்துகளில்).
இதன் மூலம் இங்கிலாந்து அணியின் பென் மேயஸின் 98 பந்துகளில் 150 ஓட்டம் என்ற மைல்கல் சாதனையை வைபவ் சூரியவன்ஷி முறியடித்தார்.
ஒட்டுமொத்தமாக 80 பந்துகளில் 175 ஓட்டங்களை எடுத்தது சூரியவன்ஷியின் அதிரடி பேட்டிங்கின் தலைசிறந்த ஓட்ட எண்ணிக்கையாக அமைந்தது.
அவர் தனது முதல் அரைசதத்தை வெறும் 32 பந்துகளில் எட்டினார், பின்னர் 23 பந்துகளில் தனது இரண்டாவது அரைசதத்தை எட்டினார், அணித் தலைவர் ஆயுஷ் மத்ரேவுடன் இணைந்து இந்தியாவை ஒரு அற்புதமான ஓட்ட எண்ணிக்கைக்கு அழைத்துச் சென்றார்.
இருவரும் இணைந்து 19 ஓவர்களில் 142 ஓட்டங்கள் கூட்டணி அமைத்தனர்.
பின்னர் மத்ரே 51 பந்துகளில் 53 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
சற்று முன்னர் வரை இந்திய அணி 33 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 297 ஓட்டங்களுடன் துடுப்பெடுத்தாடி வருகிறது.















