புத்தல – கதிர்காமம் சாலையில் பயணித்த வெளிநாட்டு தம்பதியினர் நேற்று (10) காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளானதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் ரஷ்ய நாட்டவர் படுகாயமடைந்து ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காயமடைந்தவர் 45 வயதான அரியானா என்ற ரஷ்யப் பெண் ஆவார்.
சம்பவம் நடந்தபோது, அவர் தனது 48 வயது கணவர் டெனிஸ் மெல்சனுடன் புத்தலவிலிருந்து கதிர்காமத்திற்கு முச்சக்கர வண்டியில் பயணித்ததாகக் கூறப்படுகிறது.
சாலையின் அருகே ஒரு காட்டு யானை நிற்பதைக் கண்ட வெளிநாட்டு தம்பதியினர், தங்கள் முச்சக்கர வண்டியில் இருந்து இறங்கி, காட்டு யானையை புகைப்படம் எடுக்கும் நோக்கத்துடன் அந்த காட்டு யானையை நோக்கிச் சென்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அப்போது, ஆத்திரமடைந்த காட்டு யானை அவர்களை நோக்கி பாய்ந்து வந்து தாக்கியது.
இந்தத் தாக்குதலில் ரஷ்யப் பெண்ணின் வலது கையில் பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக கதிர்காமம் பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர், மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
















