இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தின் கீழ், அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் நிறுவனம், பிரான்ஸின் மார்சேய் ஃபோஸ் துறைமுகத்துடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் இந்தியா-ஐரோப்பா இடையேயான வர்த்தகத் தொடர்புகள் வலுப்படும் என்று சொல்லப்படுகிறது.
பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இந்தியப் பயணத்தின்போது கையெழுத்தான இந்த ஒப்பந்தம், இரு நாடுகளின் வளர்ந்து வரும் பொருளாதாரப் பங்காளித்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.
இந்தியா, மத்திய கிழக்கு, ஐரோப்பாவை இணைக்கும் ஐ.எம்.இ.சி. வழித்தடம், 2023 ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் தொடங்கப்பட்டது. கடல்வழி, ரயில்வே, டிஜிட்டல் மற்றும் தூய்மையான எரிசக்தி உள்கட்டமைப்பை ஒருங்கிணைக்கும் பன்முகப் போக்குவரத்து வழித்தடமாக இது விளங்குகிறது. தடையற்ற வர்த்தகப் போக்குவரத்தை எளிதாக்குவதும், வழித்தடத்தில் உள்ள துறைமுகங்களுக்கு இடையே ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதும் இதன் முக்கிய இலக்காக உள்ளது
துறைமுகங்களை டிஜிட்டல் மயமாக்குதல், ஸ்மார்ட் தொழில்நுட்ப பயன்பாடு, இணைய பாதுகாப்பை மேம்படுத்துதல், பசுமைவழி கடல்சார் இணைப்புகளை உருவாக்குதல் ஆகியவை இந்தக் கூட்டுறவின் மையமாக உள்ளன. இது இரு பிராந்தியங்களுக்குமிடையே தளவாட மற்றும் கடல்சார் இணைப்பை மேம்படுத்தும் ஒரு குறிப்பிடத்தக்க படியாகும்.
இந்த ஒப்பந்தத்தின்படி அதானி துறைமுகங்களின் முந்த்ரா மற்றும் ஹசிரா ஆகியவை இந்தியா-மேற்கு ஆசியா இணைப்புக்கான கிழக்கு நுழைவாயில்களாகும். அதேவேளை மார்சேய் ஃபோஸ் துறைமுகம் ஐரோப்பாவிற்கான மேற்கு நுழைவாயிலைப் பலப்படுத்தும். சுமார் 70 மில்லியன் டன் கூடுதல் சரக்கு கையாளும் திறனுடன், இத்துறைமுகம் ஐரோப்பிய சந்தை இணைப்பை மேம்படுத்தி, இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய வர்த்தகத்திற்கு திறமையான பாதையை வகுக்கும்















