அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உலக நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது விதித்திருந்த பாரிய வரிகளை அந்நாட்டு உயர்நீதிமன்றம் இரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது.
அமெரிக்க உற்பத்திகளை ஊக்குவிப்பதாகக் கூறி, கடந்த ஆண்டு ட்ரம்ப் நிர்வாகம் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது கடுமையான வரிவிதிப்புகளை அமுல்படுத்தியது.
இதற்காக அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறுவதற்குப் பதிலாக, 1977 ஆம் ஆண்டின் சர்வதேச அவசரகால பொருளாதார அதிகாரச் சட்டத்தை ட்ரம்ப் பயன்படுத்தினார்நாட்டில் அவசரகால நிலை நிலவுவதாகக் கூறி, நாடாளுமன்றத்தைத் தவிர்த்து இந்த வரிவிதிப்பு உத்தரவுகளை அவர் பிறப்பித்திருந்தார்.
அவசரகால அதிகாரச் சட்டத்தின் கீழ் இவ்வாறான வரிகளை விதிப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை என உயர்நீதிமன்றம் 6-3 என்ற விகிதத்தில் தீர்ப்பளித்துள்ளது.
வரிகளை விதிக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உரியது என்றும், ஜனாதிபதி தனது அதிகார வரம்பைத் மீறிச் செயற்பட்டுள்ளார் என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கு முன்னதாக 2025 ஆகஸ்டில் மேல்முறையீட்டு நீதிமன்றம் இந்த வரிகள் சட்டவிரோதமானவை என்று கூறியிருந்த போதிலும், அவற்றை நடைமுறையில் இருக்க அனுமதித்திருந்தது.ஆனால், தற்போது உயர்நீதிமன்றம் அந்தத் தீர்ப்பை உறுதிப்படுத்தி வரிகளை முற்றாக நீக்கியுள்ளது.
கிட்டத்தட்ட உலகின் அனைத்து நாடுகளின் மீதும் ட்ரம்ப் விதித்த ‘பரஸ்பர’ வரிகள் உள்ளிட்ட பாரிய வரிவிதிப்புகளுக்கு எதிராகவே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜனாதிபதியின் இத்தகைய நடவடிக்கைகள் சட்டத்தின் மைய நோக்கத்தைத் தாண்டி அமைந்துள்ளதாக நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
















